விருப்ப மனு விநியோகம் ஆன்லைன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென காணொளி மூலமாக மா.செக்கள் கூட்டத்தை நடத்தி சில ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன்களைப் போட்டிருக்கிறார் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
‘வேட்பாளர் பட்டியலைப் பற்றி தகவல் சொல்லப்போகிறார்!’ என ஆவலுடன் வந்த சில மா.செக்கள் ஆனந்த் போட்ட கண்டிஷன்களால் அப்செட் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
நேற்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய இந்த மா.செக்கள் கூட்டம் கிட்டத்தட்ட 6:30 மணி வரை நடந்திருக்கிறது. தலைவரும் முக்கிய நிர்வாகிகளும் இல்லாமல் ஆனந்த் தனியாக மா.செக்கள் கூட்டத்துக்கு லாக் இன் ஆகி வந்திருக்கிறார்.
இடையில் நெட்வொர்க் பிரச்னையால் சில நிமிடங்கள் கூட்டம் தடைபட்டதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க ஆனந்த் போட்ட கண்டிஷன்களால் நிரம்பியிருந்திருக்கிறது இந்தக் கூட்டம். சில மா.செக்களும் ஆனந்திடம் மறுகேள்விகள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி மா.செக்கள் மத்தியில் விசாரித்தோம்.
‘மா.செக்களின் பொறுப்பில் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவற்றிடம் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் என்னவென்பதைப் பட்டியல் போட்டு வாங்கச் சொல்கிறார்.
தொகுதியில் நீண்ட காலமாக உள்ள பிரச்னைகள் மற்றும் தொடங்கப்பட்டு முடிவுறாமல் இருக்கும் அரசுத் திட்டங்களைப் பற்றிய பட்டியலையும் தயார் செய்து வைக்குமாறு கூறினார். அதேமாதிரி, தொகுதிக்குள் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் எத்தனை என்றும், அதன் மூலம் பயன்பெறுபவர்கள் எத்தனை பேர் என்றும் கணக்கெடுக்குமாறு கூறினார்.
இதையெல்லாம் வருகிற ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக முடித்து தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதுசம்பந்தமான கூட்டம் ஞாயிற்றுக்கிழமையே இருந்தாலும் இருக்குமென்றும் கூறினார்’ என்றனர்.

கிட்டத்தட்ட தேர்தல் அறிக்கைக்கு பாயிண்ட் கேட்பதைப் போல ஆனந்த் கேட்க மா.செக்களும் பதிலுக்குத் தங்கள் தொகுதிகளில் உள்ள பிரச்னைகளைப் பற்றி அடுக்கியிருக்கின்றனர். எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக ரிப்போர்ட்டாக ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பியுங்கள் என ஆனந்த் கூறியிருக்கிறார்.
இதன் பிறகுதான் அந்த இடியையும் இறக்கியிருக்கிறார். ‘இவ்வளவு பேர் விருப்ப மனு கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேருக்கும் நேர்காணல் வைத்து வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிப்பதற்குச் சாத்தியமே இல்லை.
அதனால் நீங்களே உங்கள் தொகுதிக்குள் விருப்ப மனு அளித்த தரப்பையெல்லாம் அழைத்துப் பேசி பிரச்னை எதுவும் இல்லாமல் சுமுகமாக முடித்து தொகுதிக்கு 2 அல்லது 3 பேரின் பெயர் பட்டியலை மட்டும் தலைமைக்குக் கொடுங்கள்.
அதிலிருந்து ஒருவரை வேட்பாளர் தேர்வுக்குழு தேர்வு செய்யும். தளபதி கை காட்டும் அந்த நபருக்கு மாவட்டத்தின் அத்தனை நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சீட் கிடைக்காதவர்கள் வருத்தப்படக்கூடாது.
கட்சிக்காக உழைக்க வேண்டும். இதில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. குறிப்பாக சமூக ரீதியிலான பிரச்னைகள் வந்துவிடவே கூடாது. அதில் ஜாக்கிரதையாக இருங்கள்’ என ஆனந்த் எச்சரித்ததாகக் கூறுகின்றனர் கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செக்கள்.

வேட்பாளரைப் பரிந்துரைக்கும் அதிகாரம் கைக்குக் கிடைப்பதால் சில மா.செக்கள் குஷியாகியிருக்கின்றனர். ஆனால், சிலரோ நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள கோஷ்டி பூசல்களையே இன்னும் தீர்த்தபாடில்லை. அதற்குள் வேட்பாளர் விவகாரத்தையும் தலையில் கட்டுகிறார்களே என அழுத்தும் கொள்கின்றனர்.




