கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது, பா.ஜ.க. முடிவில் அந்த கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பிறகு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலுக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது. முடிவில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றிபெறவில்லை. இதற்கு அ.தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொண்டதுதான் காரணம் என பா.ஜ.க-வுக்குள் சர்ச்சை வெடித்தது.
இந்தசூழலில்தான் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என பா.ஜ.க-வின் டெல்லி தலைமை விரும்புகிறது. இப்படியான பரபர சூழலில்தான் அமித் ஷா, எடப்பாடி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில், ‘அண்ணாமலையை தலைவராக வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடியாது’ என எடப்பாடி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், ‘சீனியர் தலைவர்களை அண்ணாமலை மதிக்கவில்லை’ என தமிழக பாஜகவில் இருந்தும் மூத்த நிர்வாகிகள் பலர் தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து புதிய தலைவரை நியமிக்கும் முடிவுக்கு டெல்லிக்கு வந்தது. இதையடுத்து தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கோதாவில் குதித்தனர். இந்த போட்டியின் முடிவில் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியை தட்டி சென்றிருக்கிறார்.

இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள், “ஆரம்பத்தில் இருந்தே மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார்தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அமித்ஷாவின் ஆதரவு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு வந்தபோதே நயினாருக்கு மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். பிறகு அது தள்ளிப்போனது. இந்தசூழலில்தான் தற்போது புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அவர் ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இருந்திருக்கிறார். எனவே அவர்களுடன் கூட்டணியை எளிதாக அமைக்க முடியும். அதற்கான நெளிவு, சுளிவு அவருக்கு தெரியும். மேலும் இதுவரை தமிழக பா.ஜ.க-வில் மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள்.
இதையடுத்து முக்குலத்தோர், வன்னியர் சமுதாயத்திலிருந்து ஒருவரை தலைவராக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வன்னியர் சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவர் இல்லை. எனவேதான் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினாரை தலைவராக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் முக்குலத்தோரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும். இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்துதான் நாயினரை தலைவராக்கியிருக்கிறது டெல்லி. இதில், சீனியர் தலைவர்கள் பலருக்கு வருத்தமும் இருக்கிறது. அவர்கள் நயினாருக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். எப்படியோ 2026 தேர்தலுக்கான பரமபதம் விளையாட்டை ஆட தொடங்கியிருக்கிறது, டெல்லி” என்றனர்.