விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ், “பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன். டாக்டர் அன்புமணி ராமதாஸ் இனி பா.ம.க-வின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார். தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்றார்.
பா.ம.க-வுக்குள் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பு குறித்து, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
`மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பயணம்’ என்ற தலைப்பில் தொடங்கும் அந்த பதிவு, `மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தூர்தர்ஷனுக்கு அண்மையில் அளித்திருந்த நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். தனது இளமைப் பருவத்தையும், பள்ளிக்கல்வி பயின்ற அனுபவங்களையும் அதில் அவர் விவரித்து இருந்தார். அது அவருடைய வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதாக மட்டுமின்றி அப்போது இருந்த சமூக, பொருளாதார நிலைமைகளையும் கல்விச் சூழலையும் எடுத்துச் சொல்வதாக அமைந்திருந்தது.
அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள், உதவியவர்கள் பலர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அப்போது வட தமிழ்நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கச் சூழலை அது எடுத்துக்காட்டியது.
1980-களின் பிற்பகுதியில் அவரை நான் சந்தித்தபோது அவரிடம் வெளிப்பட்ட சமூகநீதி, சமூக நல்லிணக்கம் குறித்த கருத்துகளை அவற்றின்மீது அவர் காட்டிய உறுதியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடதுசாரி அரசியல் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் பழமலை, நான் முதலானோர் அவரோடு சில ஆண்டுகள் நெருக்கமாக இருந்து செயல்பட்டதற்கு அதுவே காரணம்.
அதன் பின்னர் தேர்தல் அரசியல் என அவரை எங்கெங்கோ இழுத்துச் சென்றுவிட்டது. 1989-ல் அவர் பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கவில்லையென்றால் வன்னியர் சமூக மக்கள் அப்போதே இந்துத்துவ அரசியலுக்குப் பலியாகி இருப்பார்கள்.

அதைத் தடுத்து நிறுத்தியதில் அவரது பங்கு முக்கியமானது. அப்படிச் செய்த அவரே பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தது மிகப் பெரிய அரசியல் முரண் மட்டுமல்ல, கருத்தியல் பிழையும் ஆகும். அந்த அரசியல் சாய்வே வட தமிழ்நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இன்று பா.ம.கவின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார். இது சனாதன ஆதிக்கத்திலிருந்து பா.ம.கவை விடுவிப்பதற்கான முயற்சியா? அல்லது முழுமையாக ஒப்படைப்பதற்கான நடவடிக்கையா ? என்பதை தெரிந்து கொள்ள பலரையும் போல நானும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
