25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

கோபம், வெதும்பல், ஆற்றாமை, உற்சாகம்.. களேபரங்களுடன் இறுதியான கூட்டணி! யாருக்கு லாபம்? ஏமாந்தது யார்?

Date:

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இரண்டு முக்கியக் கட்சிகளூம் தேர்தல் கூட்டணிகளை ஒரு வழியாக இறுதி செய்து விட்டன.

இந்த இரு அணிகள் தவிர நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தனித்துக் களம் காண்கின்றன. இவர்களில் சீமானுக்கு ஆரம்பத்திலிருந்தே கூட்டணி என்கிற வார்த்தை ஒவ்வாமைதான். ஆனால் விஜய் கூட்டணி காண விரும்பினார். காங்கிரஸை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் செல்லவில்லை.

எனவே பிந்தைய இந்த இருவரையும் விட்டு விடலாம். கூட்டணி அமைத்த இருபெரும் கட்சிகளில் யார் லாபம் அடைந்தது? யார் யாருக்கு ஏமாற்றம் பார்க்கலாமா?

முதலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கலவரத்தைப் பார்க்கலாம்

திமுக கூட்டணி கட்சிகள்

தோள் கொடுத்தோருக்கு துயர்!

’ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ என ஹெச்,ராஜா சொன்னது வைரலானது. இதிலிருந்தே தங்கள் தளபதியின் ஆளுமையைப் புரிந்துகொள்ளலாம் எனக் காலர் தூக்கி விட்டனர் உடன்பிறப்புகள்.

ஆனால் கூட்டணி விஷயத்தில் ஸ்டாலினின் நடவடிக்கைகள் ராஜதந்திரமானவையாக, புத்திசாலித்தனமானவையாக இருந்ததா என்றால் உடன்பிறப்புகளே கூட சட்டென ஆமெனச் சொல்லத் தயங்குகின்றனர்.

‘இருந்த கூட்டணி உடையாம பார்த்துகிட்டது மட்டுமில்லாம புதுசா பலரையும் சேர்த்திருக்கிறாரே’ என்கிற ஒரே விஷயம்தான் அவர்களுக்கு ஆறுதல் தரவல்லதாக இருக்கிறது.

நலத்திட்டங்கள் நிறையச் செய்திருக்கிறோம் எனச் சொல்கிறார். அதிமுக பலவீனமாக இருப்பதாக மேடைக்கு மேடை பேசுகிறார். அப்படியிருக்க எதற்கு கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்? இந்த இடத்தில்தான் ’ஸ்டாலினுக்குப் பயம் வந்து விட்டது’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

எதிர்க்கட்சிகளை விடுங்கள், ஐந்தாண்டுகள் திமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளில் இன்றைய தேதிக்கு காங்கிரஸ் தவிர வேறு எவருக்காவது கூட்டணி அமைந்த விதத்தில் மன நிறைவா என்றால் இல்லை என்பதே நிஜம். காங்கிரஸ் கட்சியை தவெக பக்கம் போக விடாமல் செய்ததை சாதனையாக நினைக்கிறார் முதல்வர். ஆனால் இரண்டு கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், வைகோ ’சீட்டே வேண்டாம்ங்க’ என ஒதுங்கிய கமல் என அத்தனை பேருமே கூட்டணி அமைந்த விஷயத்தில் அவ்வளவு ஆற்றாமைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

காரணம், நேற்று வரை பாஜக பக்கமிருந்த கடைசியாக எதிர்கொண்ட தேர்தலில் அரை சதவிகித  வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவைக் கூப்பிட்டு பத்து தொகுதிகள் தந்தது, ஒ. பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் என முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களை இழுத்தது போன்ற திமுகவின் செயல்பாடுகள்தான்.

பன்னீர் அண்ட் கோ-வாவது திமுகவில் ஐக்கியமாகி விட்டதால் அவர்களால் பாதிக்கபப்டுவது சம்பந்தப்பட்ட பகுதிகளின் உள்ளூர் திமுகவினர்தான். ஆனால் தேமுதிக மட்டும் வராமல் இருந்திருந்தால் மேலே சொன்ன இவர்கள் அத்தனை பேருக்கும் கேட்ட சீட்டுகள் நிச்சயம் கிடைத்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

உள்ளுக்குள் புழுக்கத்துடன் இந்தத் தலைவர்கள் இப்போது சரி சொல்லி விட்டார்கள். ஆனால் இவர்களின் தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

சில ஆயிரம் ஓட்டுகளையாவது எதிர்ப்பக்கம் போகவிடாமல் தடுக்க தேமுதிக, பன்னீர் அண்ட் கோ உதவுவாரகள் என ஸ்டாலின் நினைத்திருக்கக் கூடும்.

எது எப்படியோ கட்சிகளின் எண்ணிக்கையைக் கூட்டி பெரியதொரு கூட்டணியை உருவாக்கி இருப்பது ஒன்றே திமுக பக்கம் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட்.

பழைய பங்காளிகள் அத்தனை பேரையும் வருத்தப்பட வைத்து விட்டது மைனஸ்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மூணு சீட்டுக்காகவா பனையூர் ரூட்டு?

காங்கிரஸ் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை 28 ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மூன்று சீட்டுகள் கூடுதலாக வேண்டுமென ராகுலோ சோனியாவோ நேரடியாக ஸ்டாலினிடமே கேட்டிருந்தால் அவரே கொடுத்திருப்ப்பார். ஏனெனில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் தேமுதிக வரவே இல்லை.

ஆனால் அப்படிச் செய்யாமல் மாணிக் தாகூர் வகையாறா ஆட்களை இறக்கி விட்டு பனையூர் போறோம் எனச் சலசலப்பைக் கிளப்பி, பாவம் விஜய்யையும் ஏமாற்றி, ’இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா’ எனக் காங்கிரஸ் கட்சியைப் பார்த்துதான் கேட்கத் தோணுகிறது.

திமுக கூட்டணிக் கட்சிகளிலேயே சந்தோஷமடைந்த ஒரே பார்ட்டி இதுதான்.

உடன்பிறப்புகள்தான் காங்கிரஸ் உடனான உடன்படிக்கை கையெழுத்தான அன்று ஸ்டாலின் கையை மேலே தூக்கி காட்டி முடித்து விட்டதைப் போல் சொன்னதைப் பெருமையாகப் பேசித் திரிகின்றனர். காங்கிரஸ் கட்சியில் சிலர் இப்படியும் சொல்கிறார்கள்.

‘தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்தபடியா அதிக எம்.பி.க்களை வச்சிருக்கிற கட்சி. எங்களுக்கு ஸ்டாலின் ஆதரவு ரொம்ப முக்கியம், ஆனாலும் அவர்க்கிட்டயே மூணு சீட் அதிகமா வாங்கிட்டோம்னா எங்க கெத்தை புரிஞ்சுக்கோங்க’

திமுக - தேமுதிக
திமுக – தேமுதிக

திண்ணையில் கிடந்த கட்சி!

’திண்ணையில கிடந்தவனுக்குத் திடுக்னு வந்ததாம் கல்ய்யாணம்’ என்பார்கள் கிராமங்களில். தேமுதிகவுக்கு இது இப்போது ரொம்பவே பொருந்திப் போகிறது. விஜய்காந்த் மறைவுக்குப் பிறகு கட்சியே காலாவதி ஆகி விட்ட நிலைதான்.

வாக்கு சதவிகிதம் அதலபாதாளத்துக்குப் போய் ரொம்ப நாள் ஆகி விட்டது. ஆனாலும் தேர்தல் வந்து விட்டால், ‘’என்னை மாயவரத்துல கேட்டாக மன்னார்குடியில கேட்டாக” என ஒரு சினிமா பாட்டு வருமே அந்தக் கதையாக எங்களைக் கூப்பிடாமல் யாரும் இங்கே அரசியல் செய்ய முடியாது எனச் சொல்வார் பிரேமலதா.

கடந்த பத்தாண்டுகளாக சட்டப்பேரவையில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சீட்டுகளின் எண்னிக்கையை அவர் தாறுமாறாகக் கேட்பதாக செய்திகள் வெளியாகின. இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிரேமலதாவை பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. ஸ்டாலினோ அள்ளித் தந்திருக்கிறார்.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்களே.

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்

சீற்றத்தைத் தொலைத்த சிறுத்தை!

வி.சி.க.வுக்குக் கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட இரண்டு சீட்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரு சீட்டை வாங்குவதற்குள் அவ்வளவு வெதும்பி விட்டார் திருமாவளவன். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் தலித் சமூகத்தினர் பிரச்னைகளைச் சந்தித்த போதெல்லாம் திமுகவை உரத்த குரலில் எதிர்க்க முடியாமல் ஏற்கெனவே நொந்து போய் இருந்தவருக்கு கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் திருப்தியாக இல்லை. கடைசியில் இரட்டை இலக்கத்தில் சீட் எனத் தீர்மானம் போட்ட பிறகே கூடுதலா இரண்டைக் கொடுத்து ஃபைனல் செய்ய முன்வந்தது திமுக.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி

எப்போதுமே இடது கை டீலிங்தானா?

இடதுசாரி கட்சிகளின் மேடைக்குச் சென்றால் தன்னுடைய பெயர் கூட கம்யூனிச தலைவர் பெயர் தான் என்பார் ஸ்டாலின். ஆனால் இடது சாரிக் கட்சிகளை திமுக எப்போதுமே இடது கையால் டீலிங் செய்கிறதோ என்கிற எண்ணம் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலருக்கும் இருக்கிறது.

இரண்டு கட்சிகளுக்கும் ஒரே எண்ணிக்கையில்தான் சீட். ஆனால் கடந்த தேர்தல் முதல் செலவுக்கு பணமும் தரப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இந்த முறை வந்தவரைப் போதுமென நினைத்தது என்றார்கள். ஆனால் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடைசி வரை முறுக்கிக் கொண்டு நின்றது. இறுதியில் இரு கட்சிகளுக்கும் தலா ஐந்து சீட்டுகள் கிடைத்திருக்கின்றன. கடந்த முறை கிடைத்ததை விட ஒரு சீட் குறைவாக வாங்கியதில் இரு தோழர்களுக்குமே வருத்தம்தானாம்.

பொள்ளாச்சியா... நாமக்கல்லா? - களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
பொள்ளாச்சியா… நாமக்கல்லா? – களமிறங்கியது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

ஆளுக்கு ரெண்டு!

மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா இரண்டு சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் வழக்கமான கோட்டாவின் கீழ் வருகிறவர்கள் என்பதால் லாப நஷ்டம் பார்க்கத் தேவையில்லை.

வைகோ
வைகோ

உரிமையை மீட்க ஒண்ணே ஒண்ணு!

திமுக கூட்டணியில் வைகோவின் நிலைதான் படு மோசம். நான்கு சீட் எனச் சொல்லி அதில் மூன்று பேரை உதயசூரியனில் நிற்கச் சொல்லி விட்டார்கள்.

ஒருவர் மட்டும் தனிச் சின்னத்தில் நின்று கட்சியின் அங்கீகாரத்தைப் பெறப் போகிறார்களாம். ஒரு சீட் தனிச் சின்னத்தில் நிற்க அனுமதி வாங்கவே பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருந்தது கலிங்கப்பட்டி காளை எனவும் கலைஞரின் போர்வாள் எனவும் புகழப்பட்ட வைகோவால்.

பிரதமரைச் சந்தித்த கமல்
பிரதமரைச் சந்தித்த கமல்

வட்டத்துக்கு வெளியில் மய்யம்!

மய்யம் என்றால் வட்டத்தின் நடுப் பகுதியைக் குறிக்கும். ஆனால் தேர்தல் ஆட்டம் என்ற வட்டத்தை விட்டு அவராகவே வெளியேற வைத்து விட்டார்கள் கமலஹாசனை.

’இந்தத் தடவை வேடிக்கை மட்டும் பார்க்கிறேன், அதுல எனக்கொண்ணும் வருத்தமில்ல’ எனச் சொன்னாலும் கூடவே, ‘எங்களுக்குச் சொன்ன நம்பரும் திருப்தி இல்ல, உதயசூரியன்ல நிக்கச் சொன்னதும் ரசிக்கும்படி இல்ல’ எனப் பொதுவெளியில் போட்டுடைத்து விட்டார்.

எனவே 2026 தேர்தல் கூட்டணி ம.நீ.ம தொண்டர்களுக்குமே கசப்பான அனுபவம்தான்

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிலவரம் நாளை..

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அணு ஆயுதக் கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை" – ட்ரம்பிற்கு வடகொரிய அதிபர் பதிலடி

2019-ம் ஆண்டு வியட்நாம் நாட்டின் ஹனோய் (Hanoi) நகரில் நடைபெற்ற வரலாற்று...

`ஒரு டீ விலை 5 ரூபாய் இருக்கும்போது 50,000 லிமிட்னு சொன்னாங்க.! இன்னைக்குமா?' – விக்கிரமராஜா

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு...

"தளபதிக்கு உதயநிதி; எனக்கு கதிரவன்" – மகனுக்காக களமிறங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மகனுக்கு மகுடம்.!தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தன்...