தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கி இருக்கிறது.
திமுகவுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உடன்பாடு ஏற்படாத சூழலில் இன்று (மார்ச்.14) மூன்றாம் கட்டமாக அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர்.
ஆனால் திமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ” இன்றைய தினம் பேச்சுவார்த்தை என்றுதான் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்பில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் என எல்லோரும் அந்தப் பணிகளை மேற்கொள்ள இருப்பதனால் இன்றைக்கு நடைபெறும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பம். அந்த விருப்பத்தைத் தான் திமுகவிடம் சொல்லியிருக்கிறோம்.
புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
ஆகவே அவர்களுக்கெல்லாம் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுகின்றபோது இடதுசாரி கட்சிகளுக்கு தரமுடியாது என்று சொல்வதற்கான எந்தவித நியாயமும் இல்லை. கடந்தத் தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முடிவு.
இதை பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் தங்களது தலைவரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.




