30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

கழகங்கள் இல்லா குமரி மேற்கு மாவட்டம்; தேசியக் கட்சிகளின் கையில் தொகுதிகள்; பின்னணி என்ன?

Date:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அரசியல் கட்சிகள் இந்த ஆறு தொகுதியையும் இரண்டாகப் பிரித்து கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக இயங்கி வருகின்றன.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய தொகுதிகள் கிழக்கு மாவட்டத்திலும், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் உள்ளன. மாநிலக் கட்சியான அ.தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் நேரடியாகப் போட்டியிடுகிறது.

மற்ற தொகுதிகள் அனைத்தும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க மற்றும் த.மா.க கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோன்று மாநிலக் கட்சியாக விளங்கும் தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

கடந்தமுறை வென்ற ஒற்றை தொகுதியான பத்மநாபபுரத்தை சி.பி.எம் கட்சிக்கும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளைக் கடந்த முறை போன்று காங்கிரஸுக்கும் ஒதுக்கி உள்ளது.

பா.ஜ.க, சி.பி.எம், காங்கிரஸ்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க கழகங்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தேசிய அளவிலான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைப்பு ரீதியாக மேற்கு மாவட்டம் தேசியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு இரண்டு கழகங்களின் தலைமையும் ஆதரவு அளித்துள்ளதுதான் ஆச்சர்யமானது.

பத்மநாபபுரம் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நேரடியாக மோதின. தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ் வென்று அமைச்சராகவும் ஆனார்.

கன்னியாகுமரி வருவாய் மாவட்டத்தில் தி.மு.க வென்ற ஒரே தொகுதியையும் கூட்டணியான சி.பி.எம்-க்குக் கொடுத்துள்ளதுதான் ஆச்சர்யத்தின் உச்சமாக உள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள 3 தொகுதிகளில் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க இதுவரை வென்றதில்லை.

விளவங்கோட்டில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகள் வென்றுள்ளன. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம், த.மா.க கட்சிகள் வென்றுள்ளன.

விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் உள்ளன. பத்மநாபபுரம் தொகுதியில் மட்டுமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வென்றுள்ளன. இப்போது தி.மு.க அந்தத் தொகுதியை சி.பி.எம்-க்கும், அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க-விடமும் ஒப்படைத்துவிட்டது.

இப்போது கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளும் தேசியக் கட்சிகள் வசம் சென்றுவிட்டன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டார்கெட் தலைநகரம்!' – சென்னையில் இறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்! – வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று...

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து...

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும்...