விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா?
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது. கோயிலின் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டது.
ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள்.
பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள்.
அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை” என்று விமர்சித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
மிகுந்த கண்டனத்திற்குரியது!- நயினார் நாகேந்திரன்
தொல்.திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
“தமிழ் அழிவதற்கும் தமிழ்க் கலாச்சாரம் அழிவதற்கும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் காரணமானவர்கள் என விசிக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், அவர்கள் கொச்சையாகப் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜயத்தையும் கங்கையையும் தமிழரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தமிழ்க் கலாச்சாரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னர்களைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் போல சித்தரிப்பதை என்றும் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.

யார் தமிழின விரோதிகள் என்று தெரியவில்லையா ?
ஒருபுறம் சோழப் பேரரசர் இராஜராஜனுக்கும், மாமன்னர் இராஜேந்திரனுக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிலையெழுப்பி, அவர்களது புகழை மேன்மேலும் பரவச் செய்கிறது.
மறுபுறம் இண்டி கூட்டணியினரோ அம்மாமன்னர்களைத் தமிழின எதிரிகளைப் போல சித்தரிக்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா, யார் தமிழின விரோதிகள் என்று?
தேர்தல் சீட்டு கணக்குகளுக்காகச் சேரக்கூடாத இடம் சென்று சேர்ந்து, தான் கெடுவதோடு நில்லாமல், பழம்பெருமைமிக்க மன்னர்களின் புகழையும் கெடுத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கொடிய முயற்சியை சகோதரர் திரு. திருமாவளவன் அவர்கள் இத்தோடு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?
இந்நிலையில் தற்போது அமமுக தலைவர் டிடிவி தினகரனும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிற்கும் பதிவில், ” தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.




