9
March, 2026

A News 365Times Venture

9
Monday
March, 2026

A News 365Times Venture

“ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜனநாயகம் – குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல" – முதல்வர் ஸ்டாலின்

Date:

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து எழுதியிருக்கிறார்.

அதன் உள்ளடக்கம்…

“2019-ம் ஆண்டு இந்தோனேசியா ஒரே நாளில் அதிபர், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்தியது. செலவைக் குறைக்கவும் நிர்வாகத்தை எளிதாக்கவும் எடுக்கப்பட்ட இந்த முயற்சி பெரும் துயரத்தில் முடிந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்ட சுமார் 900 பேர் உயிரிழந்தனர்; 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். 2024-லும் இதே போன்ற பாதிப்புகள் தொடர்ந்தன. இதன் விளைவாக, 2025-இல் அந்நாட்டு நீதிமன்றம், தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களைத் தனித்தனியாக (2 முதல் 2.5 ஆண்டுகள் இடைவெளியில்) நடத்த உத்தரவிட்டது.

முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை ஆதரிப்பவர்கள், இது செலவைக் குறைக்கும் என்றும், அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைத் தவிர்க்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்தோனேசியாவின் அனுபவம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் தனித்தனியாகவே நடக்கின்றன. ஜெர்மனியிலும்கூட மாநிலத் தேர்தல்கள் வெவ்வேறு நேரங்களிலேயே நடத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் முறை வேறு, இந்தியாவின் நாடாளுமன்ற முறை வேறு. எனவே அங்குள்ள முறையை இங்கு ஒப்பிட முடியாது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ‘129-வது அரசியலமைப்பு திருத்த மசோதா – 2024’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் கவலைக்குரியவை:

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் ஐந்தாண்டு பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்க இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

ஒரு மாநில அரசு இடையில் கலைக்கப்பட்டால், அங்கு நடத்தப்படும் புதிய தேர்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்காது. அந்தச் சுழற்சியின் மீதமுள்ள காலத்திற்கு (உதாரணமாக 1 அல்லது 2 ஆண்டுகள்) மட்டுமே அந்த அரசு பதவியில் இருக்கும். இது மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்துவதாகும்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாவிட்டால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறியது போல, இந்திய ஜனநாயகம் ‘நிலைத்தன்மையை’ (Stability) விட ‘பொறுப்புக்கூறலுக்கே’ (Responsibility) முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு அரசு சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும்போது கலைக்கப்படுவது ஒரு ஜனநாயகப் பாதுகாப்பு அரண். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையானது ஆட்சிக் கலைப்பை ஒரு நிர்வாகச் சிக்கலாகப் பார்த்து, நாடாளுமன்ற முறையை மெதுவாக அதிபர் ஆட்சி முறைக்கு மாற்ற முயல்கிறது.

உச்ச நீதிமன்றம் ‘எஸ்.ஆர்.பொம்மை’ வழக்கில் கூறியது போல, கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படைத் தூண். மாநிலங்கள் வெறும் நிர்வாக அமைப்புகள் அல்ல. அவற்றுக்கென்று தனித்துவமான அடையாளம் உண்டு. அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், மக்கள் தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் ஒரு பின்னூட்ட அமைப்பாகச் செயல்படுகின்றன.

மத்திய அளவில் ஒரு தற்காலிக அரசு தேர்தலுக்காகக் காத்திருக்க நேரிட்டால், அது பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இது நாட்டின் நிதி நிர்வாகத்தைப் பாதிக்கும். மேலும், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக நீட்டிக்கவும் இது வழிவகுக்கும்.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission – SIR

தேர்தல் செலவு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.03% முதல் 0.05% வரை மட்டுமே. இந்த மிகச்சிறிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக, அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. ஜனநாயகம் என்பது குறைக்கப்பட வேண்டிய சுமை அல்ல. அது நாம் செலுத்த வேண்டிய விலை.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ‘நீதிபதி குரியன் ஜோசப் குழு’, இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதனைத் தமிழ்நாடு அரசும் வழிமொழிகிறது. ஒரே நாடு – ஒரே தேர்தல் முறையினால் வரும் நன்மைகளை விட பாதிப்புகள் மிக அதிகம். இந்தோனேசியா செய்த தவற்றை இந்தியா செய்யக் கூடாது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அதிமுக கூட்டணி… சாரி, மோடியும், அமித் ஷாவும் கோபித்துக்கொள்வார்கள்" – முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள்...

“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ… பனையூரில் முகாமிடும் விஜய்” – பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம்...

கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் – விசாரணைக்கு உத்தரவு!

கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை...