திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத் தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பாக தனபால் களமிறங்கினார்.
களமிறங்கியது மட்டுமல்லாமல்… அந்தத் தொகுதியில் வெற்றி பெறவும் செய்தார்.
2016-ம் ஆண்டு தேர்தலில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற இவரை சபாநாயகர் ஆக்கினார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
ஆனால், 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி இந்தத் தொகுதியைப் பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது. பாஜக சார்பாக அவிநாசி தொகுதியில் களம் காண்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
இந்த நிலையில், தற்போது தனபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…
“மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய 1972 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கழகப் பணியாற்றி வருகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1977-80, 1980-84 மற்றும் 1985-88 என தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றி இருக்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின்பு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன் .
2001-2006, 2011-2016, 2016-2021 மற்றும் 2021-2026 என நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2001-2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
காலகட்டத்தில், ஆதி திராவிடர் நலன், உணவு, கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் என்னை அமைச்சராக நியமித்தார்கள்.

2011 ஆம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கிய மாண்புமிகு அம்மா அவர்கள், 2012 ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார்கள்.
2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பேரவைத் தலைவர் பொறுப்பினை மாண்புமிகு அம்மா அவர்கள் எனக்கு வழங்கினார்கள். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் நான்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கினார்கள். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலம் விசாரிக்கவோ இல்லை.
இந்தத் தருணத்தில், 1988 ஆம் ஆண்டு எனக்கு விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எனக்குத் தேவையான முதலுதவியை அளித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாண்புமிகு அம்மா அவர்களை நினைத்துப் பார்த்தேன். என் கண்களில் நீர் ததும்புகிறது. அந்தத் தாயின் கருணைக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.


வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் திரு. லோகேஷ் தனபால் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்னைப் பொறுத்த வரையில், எனக்கு ஆதியும், அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்”.




