தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், “ஒரு தேசியவாதி இறந்தத் துக்கத்தை நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி அவர்கள் உடனே வருத்தம் தெரிவித்து பதிவு செய்ததற்கு மனதின் அடி ஆழத்தில் இருந்து நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தச் செய்தி அறிந்ததும் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்ததோடு மட்டுமின்றி பாஜக உங்களோடு துணைநிற்கிறது என்றும் சொன்னார்.
தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் எனது இல்லத்திற்கு நேரில் வந்தது என் தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

என் தந்தை ஒரு தேசியவாதியாக வாழ்ந்தவர். அவர் எப்போதும் அரசியல் ரீதியாக நல்ல செய்திகளைக் கேட்டால் மனமுவந்து சிரிப்பார். அந்தச் சிரிப்பை இன்று விண்ணிலிருந்து அவர் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருப்பார் என்று நினைக்கும்போது மனநிறைவு ஏற்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.