இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சலசலப்புகள் நீடித்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவரின் உரையில், “இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சமநிலையற்றதாக இருக்கிறது. ஒருவர் உயர்ந்தவர் போலவும் மற்றொருவர் அவருக்கு கீழ் இருப்பவர் போலவும் இருக்கிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு டாலரின் மதிப்பு முக்கியம் என்றால், அதற்கான தீர்வு இந்திய மக்களிடம் உள்ள தரவுதான். எனவே, அந்தத் தரவை அமெரிக்காவிற்கு வழங்குவதற்குப் பதிலாக, அதை வைத்து நாம் அமெரிக்காவுடன் சம உரிமையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். அடிமையாகச் சரணடையக் கூடாது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் உறுதியாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை பிரதமர் மோடியோ அல்லது அவரது அமைச்சர்களோ உறுதிப்படுத்தாத உண்மை, இது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. ஆனால், இப்போது நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நமது பிரதமர் அதை வேடிக்கைப் பார்க்கிறார்.
அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் நாட்டின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். அதேபோல், நம் விவசாயிகளையும் நாம் பாதுக்க வேண்டுமல்லவா… எனவே, பாகிஸ்தானுக்கு இணையாக இந்தியாவைக் கருதும் ட்ரம்ப்பிடம், பாகிஸ்தானுக்கு சமமாக மாற்றப்பட மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து, நம் விவசாயிகளின் நலன் காக்க வலியுறுத்தியிருப்போம்.
இந்தியாவின் உணர்வுபூர்வமான விவசாயச் சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம், பிரதமர் மோடி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் கூறுகிறேன்.

இந்தியாவை விற்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்… எங்கள் ஏழை விவசாயிகளை நசுக்குவதற்கு கதவைத் திறந்துவிட்டீர்கள்” எனக் காட்டமாகப் பேசினார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களுக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “முதலில், இந்தியாவைத் தொடவோ அல்லது விற்கவோ கூடிய எந்த மனிதனும் இந்தப் பிரபஞ்சத்தில் பிறக்கவில்லை” என பதிலளித்தார்.




