2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
“இந்தியாவில் காலநிலை மாற்றத் தாக்கங்களைத் தடுப்பதற்கான நிதியில் 83% மற்றும் தகவமைத்துக் கொள்வதற்கான நிதியில் 98% உள்நாட்டில் இருந்தே பெறப்படுவதாகவும் கிடைக்கக்கூடிய நிதி மற்றும் தேவைகளுக்கு இடையேயான இடைவெளிகள் நீடிக்கின்றன, உள்நாட்டு வளங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது” எனப் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
காலநிலை நிதி குறித்துப் பொருளாதார ஆய்வறிக்கையில் சற்று விரிவாகப் பேசப்பட்டிருந்ததால் நிச்ச்யமாக நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்ச அளவில் ஏதாவது அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை பா.ஜ.க. அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மேலும் இந்நிதிநிலை அறிக்கையில் மிகவும் ஆபத்தான அம்சம் என்னவெனில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் சுரண்டிக்கொள்ள பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுதான்.
ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது.
தமிழ்நாடு அரசு இதனை ஏற்கெனவே எதிர்த்துள்ளது. அரியவகைக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது, பிரித்தெடுத்தல், ஆய்வுகள், உற்பத்தி மற்றும் அதுசார்ந்த வேலைகளை ஊக்குவிக்கும் வகையில் தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அரியவகைக் கனிமங்களுக்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுவுலை மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், சில குறிப்பிட்ட அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கையில் அவற்றுக்கான அடிப்படைச் சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசே நினைத்தாலும் கூட இதைவிட சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது. மொத்தத்தில் இந்நிதிநிலை அறிக்கை பொதுமக்கள் நலனையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எவ்வகையிலும் மேம்படுத்துவதாக இல்லை. மாறாகப் பெரு நிறுவனங்கள் மட்டுமே பலனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.




