தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு செயலாளர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது 08.04.2025 தேதியிட்ட மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில். கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்முடிவு எண் 48/2022, தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். அதன் அடிப்படையில் 10 மசோதாக்களும் சட்டமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதாவும் சட்டமாகியுள்ளது. இதனால் இனிமேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் வசமாகியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.