புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் இங்கு வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021-ல் அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை மற்றும், 50,000 பேர் வசிக்கக்கூடிய கட்டுமானம் போன்றவற்றுக்கான பணிகளை துவக்கியது ஆரோவில் ஃபவுண்டேஷன்.
அதற்காக ஆரோவில் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு ஆரோவில்வாசிகளில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மரங்களை வெட்ட வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவர் ராமதாஸ், டி.டி.வி தினகரன் போன்றவர்கள் மரங்களை வெட்டும் ஆரோவில் ஃபவுண்டேஷனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர். அப்போது நவ்ரோஸ் மோடி என்ற ஆரோவில் குடியிருப்பாளர், `ஆரோவில் பகுதியில் இருக்கும் மரங்கள் அனைத்தும் கோதவர்மன் திருமுல்பாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காடு என்ற வரையறைக்குள் வருகிறது.
அதனால் காடுகள் பாதுகாப்பு சட்டம் 1980-ன் படி மரங்களை வெட்டுவதற்கும், அங்கு சாலைகள் அமைப்பதற்கும் உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டும்” என்று 2021-ல் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் சத்யகோபால் கொண்ட அமர்வு, “மனுதாரர் வைத்திருக்கும் வாதத்தில் முகாந்திரம் இருக்கிறது.
அதனால் இந்தப் பிரச்னையின் முக்கியத்துவம் கருதி தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் 2010-ன் உத்தரவு 39, விதி 1 மற்றும் பிரிவு 19(4)-ன் கீழ் வரும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று 2022 ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ஆரோவில் ஃபவுண்டேஷன். அந்த மனுவில், `சர்வதேச நகரம் அமைக்கும் முயற்சியின் ஒர் பகுதியாகவே மரங்கள் வெட்டப்பட்டன.
மேலும் மரங்கள் வெட்டப்பட்ட பகுதி வனப்பகுதி அல்ல. பல நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் அமைதியாகவும் முன்னேற்றமான இணக்கத்துடனும் வாழ தேவையானவற்றை செய்யவே பன்னாட்டு நகரம் அமைக்கப்பட இருந்தது” என்று ஆரோவில் ஃபவுண்டேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி மற்றும் பிரசன்னா பி வரேலே ஆகியவர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, “புதுச்சேரியில் ஆரோவில் ஃபவுண்டேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை தடை செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, எந்தவித சட்டப்பூர்வமான அனுமதியும் கிடையாது. அந்த உத்தரவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் சட்ட மீறல் எதையும் அனுமதிக்க முடியாது. எனவே ஆரோவில் ஃபவுண்டேஷன் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை தடை செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அலுவலகம் பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது.” என்று உத்தரவு பிறப்பித்தனர்.