25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

ஆபாசப் பேச்சு: “அவர் கரூர் எஸ்.பி-யா… பாஜக தலைவருக்கு வக்கீலா?" – எம்.பி ஜோதிமணி ஆவேசம்!

Date:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தவறாகப் பேசினார். அவர் உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பகிரப்பட்டது.

அப்போதே எம்.பி.ஜோதிமணி தன் முகநூல் பக்கத்தில், “பா.ஜ.கவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன்.

கரூர் பாஜக போராட்டம்: செந்தில் நாதன்

அப்போதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும்.” எனக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன் மீது காவல் நிலையத்தில் புகாரும் பதிவுசெய்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், செந்தில் நாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. ஆனால், அவரைக் கைதுசெய்யவில்லை.

இது தொடர்பாகச் செய்தியாளார்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, “கரூர் மாவட்டக் காவல்துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாகப் பேசிய பா.ஜ.க மாவட்டத் தலைவரை வேண்டுமென்றெ கைதுசெய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன்ஜாமீன் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர். பா.ஜ.க-வின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.” என விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பேச எம்.பி ஜோதிமணியை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசியவர்,

எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணி

“பா.ஜ.க தலைவரின் அந்த ஆபாசக் கருத்து சாதாரணமானது அல்ல. பொது இடத்தில், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணை, அதுவும் தற்போது பதவியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரை மிக மோசமாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது கொடூரமான, அருவருப்பைத் தரும் குற்றம். இதைப் பொதுவெளியில் எதிர்த்துப் போராடுவதற்குக்கூட பலர் அவமானமான உணர்வுக்கு ஆளாகலாம். ஆனால் அரசியல் தெளிவு உள்ளவர்கள் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர முடியாத சூழலை உருவாக்கிவிடுவார்கள்.

நாங்கள் புகார் அளித்ததும் உடனடியாக FIR பதிவு செய்யப்பட்டு, பொருத்தமான பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவானது. இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதன் பிறகு காவல்துறை இந்த விவகாரத்தின் மீது மேலதிக ஆர்வம் காட்டவுமில்லை. குற்றவாளியைத் தேடும் முயற்சிகளையும் எடுக்கவில்லை. செந்தில் நாதன் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது, வீட்டில் அவர் இல்லை எனப் பல்வேறு சமாளிப்புகள் மட்டுமே இருந்தது. ஒரு கட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி குற்றவாளிக்காக வழக்கறிஞர்போல வாதாடும் வகையில் நடந்துகொண்டார். அதன் பிறகுதான் எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது.

எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணி

இந்த நிலையில்தான் நேற்று குற்றவாளிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது எஸ்.பி, சார்ஜ் ஷீட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கரூர் மாவட்டக் காவல்துறை பகிரங்கமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதே தெளிவான முடிவு. கரூர் காவல்துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது. கரூர் காவல்துறை பா.ஜ.க-வின் பொம்மையாகச் செயல்படுவது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

பா.ஜ.க தரப்பில் இருந்து தொடர்ந்து பெண்கள் மீதான அவதூறுகள், ஆபாசப் பேச்சுகள் நடைபெறுகின்றன. பா.ஜ.க-வின் சித்தாந்தமே பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்ப்பதுதானே… பெண்களுக்கு அறிவு, உணர்வு, திறமை, தைரியம் உள்ளது என்பதை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண் குழந்தை பெறும் இயந்திரம் மட்டுமே. இதை RSS தலைவர் வெளிப்படையாகப் பிரசாரம் செய்திருக்கிறார்.

காஷ்மீரில் 8-வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் முதல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் வழக்கில் குல்தீப் சிங் செங்கார் கைதுசெய்யப்பட்டது வரை, பா.ஜ.க குற்றவாளிகளுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறது. விளையாட்டு வீராங்கனைகள் குற்றம்சாட்டிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகனை எம்.பி-யாக்கி அழகுபார்க்கிறார்களே… அதன் தொடர்ச்சிதான் இப்போது என் மீதான ஆபாசப் பேச்சும்.

எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணி

இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கண்டன உரையில்தான் என்னைப் பற்றிய ஆபாசப் பேச்சு பேசியிருக்கிறார். இதுவரை பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் அவர்களின் தலைவர்கள், இதுவரை கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இதுதான் அவர்களின் அரசியல் புரிதல். பெண்கள் உழைப்பு, திறமை, அறிவு மூலம் முன்னேற முடியாது என்று கருதுகின்றனர்.

இவ்வளவு அருவருப்பான குற்றம் செய்தவரைக் காவல்துறை கைதுசெய்யாமல் அவரைக் காப்பாற்றுகிறது, முன் ஜாமீன் வாங்க உதவுகிறது என்றால், இதற்கு அரசியல் பலம் இல்லாமல் முடியாது. அப்படியானால் இந்தச் சம்பவத்துக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். அரசு இதிலிருந்து தப்ப முடியாது.

தி.மு.க, த.வெ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அரசு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும். பா.ஜ.க-வைச் சேர்ந்த குற்றவாளியின் பக்கம் காவல்துறை உயர் அதிகாரி நிற்கிறார் என்றால், ஒரு அதிகாரி பகிரங்கமாக பா.ஜ.க-வை ஆதரிப்பது நிழல் ஆட்சியை உருவாக்குகிறது. எனவே, இதற்கு அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணி

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்றால், அரசு தரப்பு குற்றவாளிகளை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி ஆதரிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போல கரூர் பா.ஜ.க தலைவர் செந்தில் நாதனுக்கு பெயில் வழங்கப்பட்டுவிட்டது. அடுத்தக்கட்டமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் எஸ்.பி் அதையும் பலவீனப்படுத்த முயல்கிறார். செந்தில் நாதன் அப்படி பேசவில்லை என நிறுவ முயற்சிக்கிறார்.

இதையும் எதிர்த்துப் போராடத்தான் போகிறேன். இது போன்ற பிரச்னைகள் எப்போதும் இருந்திருக்கிறது. எனக்கு முன் இருந்தவர்கள் இதை எதிர்கொண்டனர். ஓட்டுரிமை கோரிய முதல் பெண்ணிலிருந்து, கருப்பின உரிமை கோரிய பெண், மருத்துவம் படித்த பெண், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த பெண் வரை எல்லோரும் தடைகளைத் தாண்டித்தான் வந்துள்ளனர். நானும் அதே தடைகளை எதிர்கொள்கிறேன்.

எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணி

ஆனால், எனக்குப் பின் வருபவர்கள் இது போன்ற சூழலில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறேன். இதனால் பெண்கள் அரசியலை விட்டு விலக மாட்டார்கள். இத்தகையவர்களை மிதித்தே முன்னேறுவோம்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை தனிப்பட்டது அல்ல. ஒரு பெண் விட்ட இடத்திலிருந்து மற்றொரு பெண் தொடர்வாள். அது ஒரு பயணமே தவிர இறுதி இலக்கு அல்ல. இந்த சம்பவம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று...

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று...

நல்லகண்ணு மறைவு: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!"- ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று...