“எங்களுக்கு என்ன தேவை என்பதை தாயும், தந்தையுமாக இருக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். எனக்கு பேச தெரியும், நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி, அது என்னமுறை, அது என்ன ஜனநாயகம்? ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான்.” என கார்க்கேவை சந்தித்துவிட்டு, உற்சாகமாக சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உதிர்த்த வார்த்தைகள் இவை.
மாணிக்க தாகூர் மீது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவிடம் அளித்த புகாரும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனுமே செல்வபெருந்தகை இவ்வளவு ஆக்ரோஷமாக மாற காரணம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வபெருந்தகை நேற்று திடீரென பெங்களூர் பயணித்தார். டெல்லியிலிருந்து பெங்களூர் வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவை அங்கு சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் செல்வபெருந்தகையுடன் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் சொர்ணா சேதுராமன் மட்டுமே உடன் இருந்துள்ளார்.
இந்த மூன்று பேர் மட்டுமே சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தமிழக கூட்டணி நிலவரம் குறித்து பேசியிருக்கிறார்கள். இந்த சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதல் இல்லாமலே பலரும் கருத்துகள் வெளியிடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வபெருந்தகைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “ஏற்கனவே டெல்லியில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ராகுல், கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தி.மு.க குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை கூட்டணி குறித்து எந்த கருத்தையும் யாரும் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறினார்கள்.
அதன்பிறகும் விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் தேசிய செயலாளராகவும் உள்ள மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவந்தார். குறிப்பாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்தி அதில் கூட்டணி குறித்த தீர்மானத்தையும் போட்டார்கள். மேலும், மாணிக்கம் தாகூருடன், தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்றகுழு தலைவராக உள்ள ராஜேஷ் குமாரும் சத்தமில்லாமல் தனது ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வந்தார். இது மாநில தலைவராக உள்ள செல்வபெருந்தகைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

“மாநில தலைவராக நான் இருக்கும் போதே ஆளாளுக்கு கருத்து சொல்வதும், தீர்மானம் போடுவதாக இருந்தால் தலைவர் பதவியில் நான் ஏன் இருக்க வேண்டும்? ” என்று கடுகடுத்துவந்தார்.
டெல்லி தலைமையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்தது இவரை மேலும் சூடாக்கியது. இந்நிலையில் தான் கார்கே பெங்களூர் வந்த தகவல் தெரிந்து அவரை சந்திக்க முடிவெடுத்தார். இந்த சந்திப்பில் தி.மு.க கூட்டணி நமக்கு நம்பகமான கூட்டணி. கொடுக்குற சீட்டை வெற்றியாக மாற்றிக்கொள்ளலாம். அதே நேரம் த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பது இப்போதுள்ள நிலையில், தற்கொலைக்கு சமம். நமக்கு கிடைக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும், எம்.பிக்களையும் நாமே கோட்டைவிடுவதாக மாறிவிடும் என்று விளக்கியுள்ளார். ஏற்கனவே கார்கேவும் தி.மு.க கூட்டணியில் தொடர்வதே உத்தமம் என்கிற மனநிலையில் இருக்கிறார்.
அதோடு செல்வபெருந்தகை, “மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் இப்படி கூட்டணிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதற்கு யார் அதிகாரம் கொடுக்கிறார்கள். இனிமேல் அவர் பேசினால் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பொங்கிவிட்டார்.
கார்கேவும் “இனி கூட்டணி விசயங்கள் குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க தரப்பில் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்து கேட்கலாம்” என்று முடித்துள்ளார்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு பிறகு உற்சாக மூடுக்கு வந்த செல்வபெருந்தகை சென்னையில் இறங்கிவுடனே தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்துவிட்டார். இனி எல்லாம் தி.மு.க-வுக்கு சாதகமாகவே நடக்கும்” என்று சொல்லி முடித்தார்கள்.
காங்கிரஸ் கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என தி.மு.கவும் சத்தமில்லாமல் ஆக்ஷன் எடுத்து வருகிறது. டி.ஆர்.பாலு மூலம் டெல்லியில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடம் கூட்டணியை தக்க வைக்க பேச்சு நடந்துள்ளது. அதே போல் இன்று தமிழகம் வந்துள்ள கே.சி.வேணுகோபாலிடமும் தி.மு.க கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என நிர்வாகிகளை வைத்து அழுத்தம் கொடுக்க செல்வபெருந்தகை திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க தரப்பில் முப்பது இடங்கள் வரை தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஒரு ராஜ்யசபா, அடுத்த ஆண்டு ஒரு ராஜ்யசபா என இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை கொடுத்து காங்கிரஸ் கட்சியை கை பிடிக்க தி.மு.க தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம், “ கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு மேலிடம் முடிவுகளை எடுக்கும். அது தவிர கூட்டணி குறித்து யாரும் பேச மாட்டார்கள்” என்று சொல்லியுள்ளார். இதனால் தனது புகாருக்கு வலுசேர்ந்துள்ளது என செல்வபெருந்தகையும் குஷியாகியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவரது எக்ஸ் கணக்கில் “அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என பதிவிட்டு என்னை பற்றி என்ன புகார் சொன்னாலும் நான் அச்சப்பட போவதில்லை என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார். இனி தி.மு.க கூட்டணியை காங்கிரஸ் இறுதி செய்யும் வேலைகள் வேகம் எடுக்கும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.




