இந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம் அஸ்ஸாம். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கும் ஐந்து மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. இந்த நிலையில், சமீபகாலமாக அங்கு அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள், தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அஸ்ஸாம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபன் போரா கடந்த 32 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கியவர். கடந்த 16-ம் தேதி திங்கட்கிழமை இரவு, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பன்வர் ஜிதேந்திர சிங், கௌரவ் கோகோய் ஆகியோருடன் பூபன் போரா இரவு உணவு அருந்தினார். அதற்கு அடுத்த நாள் காலை (மார்ச் 17), தனது 32 ஆண்டுகால காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.
இந்த சம்பவம் நடந்த அதே நாள் (மார்ச் 17) காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் எழுதினார் அஸ்ஸாமின் நாகோன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரத்யுத் போர்டோலாய் (Pradyut Bordoloi).
அதற்கு அடுத்த நாள் (மார்ச்18) அன்று காலை, நாடாளுமன்றத்தின் நடைபாதைகளில் இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டுவை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தபோது, அவரைக் கட்டிப்பிடித்து, “இனி நானும் துரோகி என்று அழைக்கப்படுவேன்” எனக் கூறினார்.
இந்த வார்த்தையின் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரவ்னீத் பிட்டு, 2024-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதற்குப் பரிசாக ராஜஸ்தான் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, தற்போது இணை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர் பா.ஜ.க எம்.பி-யாக வலம் வந்தபோது, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி ரவ்னீத் பிட்டுவை ‘துரோகி’ என அழைத்தார். அதை நினைவுகூறும் வகையில்தான் பிரத்யுத் போர்டோலாய் `நானும் துரோகி என்று அழைக்கப்படுவேன்’ என்ற வார்த்தையை கூறினார். இது ராகுல் காந்தியின் தலைமைத்துவத்தின் மீதான ஒரு மறைமுகக் குத்தலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த அதே நாள், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் சைக்கியா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார் பிரத்யுத் போர்டோலாய்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் தூண்களாகக் கருதப்பட்ட தலைவர்கள் வரிசையாக பா.ஜ.க-வில் இணைவது காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக மாறியுள்ளது.
`இந்த அரசியல் மாற்ற முடிவு ஒரே இரவில் நடந்ததில்லை’ என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
அஸ்ஸாமின் மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனான கௌரவ் கோகோய், அஸ்ஸாமின் காங்கிரஸ் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய முகமாக கருதப்படும் அவர், அஹோம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுத் தருவார் என்று நம்புகிறது காங்கிரஸ்.
ஆனால், கௌரவ் கோகோய் நியமனமும், அவரின் ஆதிக்கமும் அஸ்ஸாமின் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. கௌரவின் தந்தை காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களே, இப்போது அவரின் மகனுக்குக் கீழ் பணிபுரிய விரும்புவதில்லை. இதை பா.ஜ.க குறிப்பாக ஹிமந்த பிஸ்வா சர்மா சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்கின்றனர்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தவர் என்பதால், அந்தக் கட்சியில் இருக்கும் பலவீனங்கள் அவருக்கு அத்துப்படியாகத் தெரியும். எனவே, உள்கட்சிப் பூசலை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு பலவீனங்களையும், அதனால் பாதிக்கப்படுபவர்களையும் ‘டிக்’ செய்துவருகிறார். அவரின் இந்த செயல்பாடுகள் மூலம் தன்னை ஒரு தலைசிறந்த வியூகவாதியாக முன்னிறுத்தி வருகிறார். ‘அஸ்ஸாம் காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் வரை எனக்குத் தெரியும். இந்தக் கட்சியின் பெரும்பகுதியான தொண்டர்கள் என்னால் நியமிக்கப்பட்டவர்கள்’ என அவர் கூறுவதும், அதை உறுதிப்படுத்தும்படியான அவரின் செயல்பாடுகளும் எதிர்க்கட்சியின் மீதான அவரது பிடியை பலமாக்குகிறது.
பா.ஜ.க-வின் இந்த ‘ஆபரேஷன் தாமரை’ அஸ்ஸாமில் மிகவும் எளிதாகவும் ரகசியமாகவும் நடந்து முடிந்துள்ளது. இது ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அரசியல் பிம்பத்தை அசைக்க முடியாத தலைவராக உயர்த்தியுள்ளது.
பிரியங்கா காந்தி வத்ரா, 2026 ஜனவரி மாதம் அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பரிசீலனைக் குழுவின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். பிரியாங்கா காந்தியின் வருகையையொட்டி, ‘கட்சியின் உட்கட்சிப் பூசல் சரிசெய்யப்படும். கட்சி வலுப்பெரும்’ என நம்பிக்கை எழுந்தது. ஆனால், தற்போது நடந்துகொண்டிருப்பது காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்தற்கு நேரெதிரானது. மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவின் திடீர் ராஜினாமாவால், மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க பிரியங்கா காந்தி நேரடியாகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பூபன் போரா தொடர்ந்து சிலக் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அதில், “32 ஆண்டுகாலமாக காங்கிரஸில் உழைத்த போதிலும், டெல்லியிலிருந்து வரும் உத்தரவுகளுக்குக் கூட கௌரவ் கோகோயைக் கேட்டு முடிவெடுக்கும்படியான சூழலே நிலவியது. எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து தலைமைக்கு 22 கடிதங்கள் எழுதியும், எந்தப் பதிலும் இல்லை. கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் செவிடன் காதில் ஊதிய சங்காக பயனற்று இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடந்துவரும் பட்ஜெட் கூட்டத் தொடர் வரை, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை பலமுறை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரத்யுத் போர்டோலாய் போன்ற ஒரு சிட்டிங் எம்.பி., தனது மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் கட்சியிலிருந்து வெளியேறுவது காங்கிரஸின் தேசியத் தலைமைக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.

போர்டோலாய் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்திக்க மாதக்கணக்கில் காத்திருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. வாட்ஸ்அப் மெஸ்சேஜுகளுக்கும் பதில் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரணத் தொண்டனின் நிலை என்ன? லஹரிகாட் தொகுதி வேட்பாளர் தேர்வில் இம்ரான் மசூத் போன்றவர்களின் தலையீடு பெரும் சிக்கலாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வெளியேற்றங்கள் அஸ்ஸாம் காங்கிரஸை ஒருதலைப்பட்சமான போட்டிக்குத் தள்ளியுள்ளன. நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் பலம் 100-லிருந்து 99-ஆகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹிமந்தா பிஸ்வா சர்மா வெற்றிக் களிப்புடன், “காங்கிரஸில் இன்னும் சில இந்துத் தலைவர்களே எஞ்சியுள்ளனர், அவர்களும் விரைவில் வருவார்கள்” என்று கூறியிருப்பது, அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருப்பதையே உணர்த்துகிறது. இப்போது அஸ்ஸாம் அரசியல் வட்டாரங்களில் எழும் ஒரே கேள்வி
“அடுத்து யார்?”




