அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை’ முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். ‘இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!’ என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்சம் சங்கடத்துடன் தான் காணப்பட்டனர்.
‘இப்படி பண்ணிட்டானே அந்த படுபாவி எடப்பாடி. நேத்து வரைக்கும் கூட அண்ணன் காத்திருந்தாரே. ஒரு போன் ராயப்பேட்டையில இருந்து வந்திருந்தா கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாரே. அவரும் என்ன பண்ணுவாரு பாவம். எல்லாவனும் ஒதுக்குறான். எவ்வளவோ இறங்கி போயும் மரியாதை இல்லன்னா, மரியாதை எங்க கிடைக்குதோ அங்க போயித்தானே ஆகணும். ஆனாலும், அறிவாலயம் உள்ள கால் வச்ச உடனே கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு. கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்குது’ என நம்மிடம் புலம்பினார் ஓ.பி.எஸ் உடன் அறிவாலயம் வந்திருந்த கரைவேட்டி ஒருவர்.
ஜெயலலிதா படம் பொறித்திருந்த சங்கிலி அணிந்த ஒரு வயதான அம்மாவைதான் மீடியாவின் கேமராக்கள் அத்தனையும் சுற்றி வந்தன. ஓ.பி.எஸ் இன் ஆதரவாளரான அவர் கண்ணீர் மல்க நெஞ்சில் அடித்துக் கொண்டு ஏரியா அதிமுகக்காரர்கள் பலருக்கும் அழைத்து புலம்பிக் கொண்டிருந்தார். ‘அண்ணன் மனசு எங்க போகுதோ. அங்க நாமளும் போயிடுவோம். ஆனால், அறிவாலயத்துக்குள்ள கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர் வந்திடுச்சு. மனசு பாரமா இருக்கு’ என புலம்பி தவித்தார்.

இன்னும் சில ஆதரவாளர்கள் அறிவாலயத்தின் நிர்வாகிகளை பிடித்து தொலைபேசி எண்ணை பரிமாறி முகத்தை பதிய வைக்கும் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஓ.பி.எஸ்க்கும் அறிவாலயம் வருவதில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் தரப்பு, முக்கிய அமைச்சர்களின் படையோடு அவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
எ.வ.வேலு, கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு என முக்கிய அமைச்சர்களெல்லாம் அறிவாலயத்தின் வாசலில் ஆஜராகியிருந்தனர். அதிமுகவினரை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை ஏற்றிருக்கும் சேகர் பாபு ஓ.பி.எஸ் உடனே காரில் வந்தார்.
ஓ.பி.எஸ் இன் தேனியிலிருந்து தங்கத்தமிழ்செல்வனும் வரவைக்கப்பட்டிருந்தார். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் போது தங்கத்தமிழ்செல்வனும் சேகர்பாபும்தான் உடனிருந்து பார்த்துக் கொண்டனர்.

ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தாலும் அவரின் ஆதரவாளர்கள் பலரும் சட்டைப் பையில் ஜெ.வின் படத்தோடுதான் சுற்றி வருகின்றனர். அதேமாதிரி, ஓ.பி.எஸ் அறிவாலயத்திலிருந்து கிளம்புகையிலும் அவரின் காரில் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது.


‘கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் முதல்வர் அரவணச்சதுல அண்ணன் ஹாப்பிதான்’ என்கின்றனர் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்!




