25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

அறம்… நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

Date:

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி… நூற்று ஒரு ஆண்டுகளுக்கு முன் வடக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய அதே நாளில், தென்கோடியில் உதித்தது இரா.நல்லகண்ணு என்ற ஒளி நட்சத்திரம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் மகத்தான தலைவராக உருவெடுத்த நல்லகண்ணுவுக்கும் இப்போது நூற்று ஒரு வயது.

ஸ்ரீ வைகுண்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, வீறு கொண்டு எழுந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் நல்லகண்ணுவின் மனதிலும் கனலாய் எரிந்தது. அங்கே நடந்த எல்லாப் போராட்டங்களிலும் தேசிய உணர்வோடு களத்தில் நின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். அப்பொழுதே தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் நல்லகண்ணுவின் குரல் மேலோங்கியது.

ஸ்ரீவைகுண்டத்தில் பிரிட்டிஷ் அரசு அமைத்த உணவு கமிட்டியில் குடும்பன் என்ற பட்டியலின மாணவருக்கு அவமதிப்பு நிகழ்ந்தபோது கொதித்தெழுந்து அவரை அழைத்து வந்து சரிக்குச்சமமாக அமர வைத்தார் நல்லகண்ணு.

நல்லகண்ணு

மகாத்மா, நேருவின் மீது பற்றுக்கொண்டிருந்த நல்லகண்ணுவுக்கு பொது உடைமை நூல்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆசிரியர் பலவேசம். அதன் விளைவாக காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு இன்று நாம் காணும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தார்.

1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் நல்லகண்ணு. போராட்டங்களில் அதிதீவிரம் காட்டியதால் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்க சமயம். உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலம். ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் இருக்கிற பத்தினிக்கோட்டையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நல்லகண்ணுவிற்கு தகவல் கிடைக்க, யாரும் சுலபமாக செல்ல முடியாத அந்த மறைவிடம் பற்றி அரசு அதிகாரிகளிடம் தைரியமாக புகார் அளித்தார்.

அதிகாரிகள் அதிரடியாக கோட்டைக்குள் புகுந்து நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். இந்த நடவடிக்கையால் நல்லகண்ணுவின் பெயர் மேலும் பிரபலமானது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக காவல்துறையின் அச்சுறுத்தல்கள், மிராசுகளின் மிரட்டல்கள் என்பதெல்லாம் அவர் வாழ்க்கையின் இயல்பானது.

ஆதினங்களின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடந்தன. அங்கு நிலமற்ற தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட, கொதித்தெழுந்தார் நல்லகண்ணு. அவர் நடத்திய வீரியமிக்கப் போராட்டங்கள் தொழிலாளர்களின் குடியுரிமையை மீட்டுத் தர. நெல்லை சீமையெங்கும் தோழரின் புகழ் பரவியது.

1948-ல் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டத்தை முன்னெடுத்தற்காக, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட தலைமறைவானார் நல்லகண்ணு. ஆனால் அவரது போராட்டம் ஓயவில்லை. குறிவைத்துத் தேடிய தேடிய காவல்துறை, நல்லகண்ணு பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தது. பிற தோழர்களை அடையாளம் காட்டச் சொல்லி இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து கட்டி, தெருவில் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது காவல்துறை. தலை முடியை பிய்த்து பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை செய்தும் நல்லகண்ணுவிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. பொறுமை இழந்த போலீஸ் அதிகாரி, சிகரெட் நெருப்பால் நல்லகண்ணுவின் மீசையை பொசுக்கிய கொடுமைகூட நடந்தது. அப்படியும் மௌனம் கலைக்கவில்லை, நம் தோழர்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

எந்த தகவலையும் பெற முடியாமல் நாங்குநேரி சிறைக்குள் மட்டுமே அவரை அடைக்க முடிந்தது காவல்துறையால். அவர்மீதும் குற்றம் சாட்டி நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கவிழ்க்க வேலை நிறுத்தங்களை தூண்டினார், ஆயுதப் புரட்சி நடத்தினார், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தார், வெடிகுண்டுகள் தயாரித்தார் என பல குற்றச்சாட்டுகள் புனைந்து நல்லகண்ணு மீது சுமத்தப்பட்டது.

ஆனால் சிறைக்குள்ளே நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக சீற்றத்தோடு வெகுண்டெழுந்தார் இந்த சிவப்புப் போராளி. அதுவரை கிடைக்காத பல உரிமைகள் சிறைவாசிகளுக்குக் கிடைத்தன. அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமையையும் வாங்கி கொடுத்தார்.

ஏழாண்டு சிறைவாசத்திற்கு பிறகு, சதி வழக்கில் இருந்து மீண்டுவந்தார் நல்லகண்ணு. ரஞ்சிதம் அம்மாள் மனதோடு இணைந்த வாழ்க்கைத் துணைவியானார். திருமணத்துக்குப் பிறகும் அவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. எளிமையும் தூய்மையுமே தன் அடையாளமாகக் கொண்ட இந்த அரிய அரசியல்வாதி 1992 முதல் 2005 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் பெருநேசம் கொண்ட இந்த மாமனிதர், கடனாநதியில் அணை கட்டுவதற்காக தன் உயிரை முன்வைத்து நடத்திய போராட்டம் பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பசுமையாக்கியது. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவரே ஆஜராகி வைத்த வாதங்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தன.

நியாயம் உணர்ந்து உடனே மணல் அள்ள தடை விதித்தது நீதிமன்றம். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ இல்லாத இந்த மகத்தான மனிதருக்காக ஒரு கோடி ரூபாயை அன்போடு அளித்தார்கள் தோழர்கள். அடுத்த நொடியே கட்சிக்காக அதை திருப்பியளித்து திகைப்பூட்டிய பண்பாளர். அம்பேத்கர் விருதுக்காக தமிழக அரசு தந்த லட்ச ரூபாயையும் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

தகைசால் தமிழர் விருதோடு தந்த பத்து லட்சத்தோடு, தன் பையிலிருந்த ஐயாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்தே திருப்பி அளித்தார். இத்தனையாண்டு அரசியல் வாழ்க்கையில் சொந்த வீடு கூட இல்லாத நேர்மையாளர். அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கான நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற மாபெரும் தலைவர்.

சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் பெருந்தமிழரின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கையோ நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம்.

கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' –  ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து...

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு...

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." – உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள்...

கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி – முழு விவரம்!

கேரளா என்ற மாநிலப் பெயரை `கேரளம்' என மாற்ற வேண்டும் என்பது...