13
March, 2025

A News 365Times Venture

13
Thursday
March, 2025

A News 365Times Venture

`அந்த 2 சர்வேக்கள்; திராவிட கட்சிகளின் வாக்குவங்கி’ – பி.கே, விஜய் சந்திப்பும், வியூக பின்னணியும்

Date:

விஜய் – பிரசாந்த் கிஷோர்

தமிழக அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் பனையூரில் குவிந்திருக்கும் அளவுக்கு மாறிப்போயிருக்கிறது, தவெக தலைவர் விஜய் – ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு. இரண்டு நாள்களாக சென்னையில் முகாமிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், தமிழக வெற்றிக்கழகத்தின் சீனியர் நிர்வாகிகள், விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் பேசிவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களில் என்ன பேசப்பட்டது… தவெக-வின் வியூகம்தான் என்ன..?

ஆதவ் அர்ஜுனா

ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரை சென்னைக்கு வரவழைத்து, அவரை விஜய்யுடன் சந்திக்க வைத்ததே, தவெக-வின் பிரசாரப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தான் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். பிப்ரவரி 10-ம் தேதி காலை பாட்னாவிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துசேர்ந்த பிரசாந்த் கிஷோரை, தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விஜய்யின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

நம்மிடம் பேசிய தவெக-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “பிரசாந்த் கிஷோரும் ஆதவ் அர்ஜுனாவும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் சேர்ந்துதான், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக-வுக்காக தேர்தல் வியூகம் அமைத்து பணியாற்றினர். அப்போதிருந்தே இருவருக்கும் இடையேயான நட்பு இறுகிவிட்டது. தவெக-வில் இணைந்து புதிய பொறுப்பைப் பெற்ற ஆதவ் அர்ஜுனா, உத்தரகாண்டில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்றார். அதனால்தான், கட்சியின் தொடக்கவிழா நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. உத்தரகாண்டில் இருந்தபடியே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அமைப்பது குறித்தும், அதற்கு உதவ வேண்டுமென்ற கோரிக்கையுடனும் பிரசாந்த் கிஷோருடன் ஆதவ் பேசியிருக்கிறார். தவெக தலைவர் விஜய்யையும் பிரசாந்த் கிஷோருடன் பேச வைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்தே, சென்னையில் நேரில் சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, பாட்னாவிலிருந்து விமானம் மூலமாக வந்த பிரசாந்த் கிஷோரை அழைத்துக்கொண்டு, நீலாங்கரையிலுள்ள தலைவர் விஜய்யின் வீட்டுக்குச் சென்றார் ஆதவ் அர்ஜுனா. அதுவரையில், இந்தச் சந்திப்பு குறித்து கட்சியின் மிக சீனியர் நிர்வாகிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. உளவுத்துறைக்கும் தெரியவில்லை. பிரசாந்த் கிஷோர் நீலாங்கரைக்கு வருவதற்கு முன்னர், ஒட்டுமொத்த உளவுத்துறையும் ‘அலெர்ட்’ ஆகிவிட்டது. ஆதவ் அர்ஜுனாவின் காரையும் பனையூரிலுள்ள அவர் வீட்டையும் கண்காணிக்க ஸ்பெஷல் டீம்மையும் இறக்கியிருக்கிறார்கள். தன் வீட்டுக்கு வந்த பிரசாந்த் கிஷோரை வாசல் வரை வந்து வரவேற்று உபசரித்திருக்கிறார் விஜய்.

தவெக – விஜய்

இருவருமே அரசியல் கட்சித் தலைவர்கள் என்பதால், தங்களுடைய வாழ்த்துகளை பரஸ்பரம் பறிமாறிக்கொண்டனர். தவெக-வின் முதல் மாநாடிற்கு, வி.சாலையில் கூடிய கூட்டத்தை சிலாகித்துப் பேசியிருக்கிறார் பி.கே. அதன்தொடர்ச்சியாக, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேச்சு திரும்பியிருக்கிறது. ‘தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளோட கூட்டு வாக்குகள் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக, திமுக கட்சிகள் சேர்ந்து 68 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளையே அந்த இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்றிருக்கின்றன. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக, திமுக கட்சிகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 71 சதவிகிதத்தை பெற்றுள்ளன.

இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில், திராவிடக் கட்சிகளை விரும்பாத வாக்காளர்களின் எண்ணம் பலமாகவே ஒலிக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால், கிட்டத்தட்ட 30 சதவிகித வாக்காளர்கள் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் விரும்பவில்லை’ என பி.கே விவரிக்கவும், ‘திமுக, அதிமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாமே… அப்படிப் பார்த்தால், அந்த 30 சதவிகிதத்திலும் அந்த இரண்டு கட்சிகளுக்கு வாக்குகள் சென்றதாகத்தானே அர்த்தம்’ என்றிருக்கிறார் விஜய்.

தவெக -விஜய்

அந்தக் கேள்வியால் ஆர்வமான பி.கே., ‘அந்தக் கூட்டணிக் கட்சிகளும் ஒரு சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையே. திமுக, அதிமுக கட்சிகளை விரும்பாத பெரும்பகுதியான வாக்காளர்கள் ஒரு அரசியல் மாற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்று சக்தி நீங்கள்தான்’ என ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. தலைவர் விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கும் நிலையில், அவரோடு பிரசாந்த் கிஷோர் எந்தளவில் இணைந்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதையும் விஜய் விவரித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்த இச்சந்திப்பில், தேசிய அரசியல் குறித்தும் விவாதித்திருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

விஜய்யின் நீலாங்கரை வீட்டில் சந்திப்பை முடித்துக்கொண்ட பிரசாந்த் கிஷோர், தன் மனைவியுடன் பனையூரிலுள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கேயே இரவு தங்கியவர், அடுத்தநாள் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துவிட்டு, தன் மனைவியுடன் திருப்பதிக்குப் புறப்பட்டுள்ளார்.

தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “பிப்ரவரி 11-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு விவரங்களைக் கேட்டறிந்தார் பி.கே. கட்சியில் 28 அணிகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்தும், 120 மாவட்ட அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருவது குறித்தும் விளக்கினார் பொதுச் செயலாளர் ஆனந்த். தவெக-வுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுப்பது, ஒரு கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோரின் வேலையல்ல. ஆனாலும், அதை அவர் செய்துகொடுப்பதன் பின்னணியில், 2029 நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகள் ஒளிந்திருக்கின்றன.

பிரசாந்த் கிஷோர்

2029 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று அணியை கட்டமைக்க முயல்கிறார் பி.கே. அதன் முகமாக இருக்கவும் திட்டமிடுகிறார். அதற்கு விஜய் உதவுவார் என்பதற்காகத்தான், அவரைச் சந்திக்கவே ஒப்புக்கொண்டார். நீலாங்கரையில் விஜய்யை சந்தித்தபோது தன்னுடைய திட்டத்தையும் கூறியிருக்கிறார் பி.கே. சில மாதங்களுக்கு முன்னர் பி.கே-வின் டீம் தமிழகத்தில் இரண்டு சர்வேக்களை எடுத்திருக்கிறது. அந்த சர்வேயில், தவெக-வுக்கு தனித்த ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் கட்சி கட்டமைப்பை பயன்படுத்தி, சரியான தேர்தல் திட்டமிடுதலுடன் செயல்பட்டால், தேர்தல் முடிவில், தவிர்க்கவே முடியாத வலுவான கட்சியாக வலம் வரும் எல்லா சாத்தியங்கள் உள்ளன. அதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான், தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்” என்றனர்.

பிரசாந்த் கிஷோருடன் நடத்திய சந்திப்பில், அதிகாரப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்கின்றன தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள். பிரசாந்த் கிஷோர் ஒரு கட்சியின் தலைவர் என்பதால், அவரோடு ஒப்பந்தம் கையெழுத்திடாமல், அவர் டீம்மை சேர்ந்தவர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாம். தவெக-விற்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படலாம் எனத் தெரிகிறது. எது எப்படியோ, திமுக-வின் நெளிவு சுளிவுகள் அனைத்தும் தெரிந்த ஆதவ் அர்ஜுனாவும் பிரசாந்த் கிஷோரும் கரம் கோத்திருக்கிறார்கள். அவர்களுடன் விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்திருக்கிறார். ‘இம்மூவரின் கூட்டணி, திமுக, அதிமுக-வுக்கு எதிரான ரேஸில் விஜய்யை வேகமாக ஓட வைக்குமா?’ என்பது வெகுவிரைவில் தெரிந்துவிடும்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TASMAC: "டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல்" – குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத்துறை; பின்னணி என்ன?

அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 6-ம் தேதி எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம்,...

TVK: "விஜய்யின் டிரைவர் மகனுக்கு மா.செ பதவி; விஜய் காரை மறித்து மனு' – பனையூர் பரபர!

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை...

புதுச்சேரி: "பூரண மதுவிலக்குக்கு நான் தயார்… எம்.எல்.ஏ-க்கள் தயாரா?" – முதல்வர் ரங்கசாமி கேள்வி

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ-க்களின்...

Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு; நடந்தது என்ன?

மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த...