18
February, 2026

A News 365Times Venture

18
Wednesday
February, 2026

A News 365Times Venture

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

Date:

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஆட்சியில் பங்கு குறித்து தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பழமையான கூட்டணி. பாசிச சக்திகளை எதிர்ப்பதில் ஓரணியில் நாங்கள் போராடி வருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். தி.மு.க தரப்பிலும் ஒரு குழு அமைத்து எங்களுடன் பேசுவதற்காகக் காத்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவும் ராகுல்காந்தியும்தான் எடுப்பார்கள்” என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

கே.சி.வேணுகோபால்

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தினம்தோறும் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்ரவர்த்தியும் கல்லெறிந்து வரும் நிலையில், ‘கூட்டணி தொடர்கிறது. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கோஷமில்லை’ என்று கே.சி.வேணுகோபால் கூறியிருப்பது, புது திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆனாலும்கூட, வேணுகோபாலின் வார்த்தைகளை நம்புவதற்கு அறிவாலயம் தயாராக இல்லை. “நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருப்பவர் மாணிக்கம் தாகூர். மதுரையில் நடந்த ஒரு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக வரவேண்டிய அவசியமில்லை. அந்தக் கூட்டத்தில்தான், ‘அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர் முன்னிலையிலேயே, தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம், ராகுல் காந்தியின் முன் அனுமதி இல்லாமல் மாணிக்கம் தாகூர் செய்யவே மாட்டார்.

தவிர, ‘அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியது, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர்தான். அவரது பேட்டி, டிச.23-ம் தேதி வெளிவந்த தினத்தந்தி இதழிலில், தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.

‘காங்கிரஸ் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது அவசியம்’ என்ற கருத்தைச் சொல்லியிருந்தார் கிரிஷ் சோடங்கர். அவரது கருத்தை வழிமொழிந்த மாணிக்கம் தாகூரும், ‘இதுதான் காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடும்’ என்று கூறியிருந்தார்.

இப்படி, அவர்கள் இருவருமே ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் பேசிவரும் நிலையில், ‘ஆட்சியில் பங்கு கோஷத்துக்கும் கட்சித் தலைமைக்கும் சம்பந்தமில்லை’ என்று வேணுகோபால் கூறியிருப்பதை நம்புவதற்கில்லை. அதனால்தான், டெல்லி தலைமையே வாய் திறக்கட்டும் என்று அமைதி காக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

தினத்தந்தி தலைப்புச் செய்தி

வேணுகோபால் சென்னை வந்திருந்தபோதுதான், சீட் பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, மக்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோருடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, காங்கிரஸ் தொடர்பாகவும் பேச்சு திரும்பியிருக்கிறது. “இவ்வளவு தூரம் உறவுநிலை மோசமாகிவிட்ட பிறகு, காங்கிரஸ் உடன் கூட்டணியே அமைந்தாலும், அவர்கள் ஓட்டு நமக்கு விழுமா.. அல்லது, நமது தொண்டர்கள்தான் அவர்களுடன் இணக்கமாக வேலைப் பார்ப்பார்களா… இனி காங்கிரஸை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்வதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

அதற்கு, “காங்கிரஸ் தொண்டர்கள் நமக்கு வாக்களிப்பார்களா, இல்லையா என்பதல்ல பிரச்னை. காங்கிரஸ் நம்மோடு இருந்தால்தான் சிறுபான்மை வாக்குகள் சிதறாமல் நமக்கு விழும். அந்த பிம்பம்தான் முக்கியம். இந்த மனமாச்சரியங்களெல்லாம், டெல்லியிலிருந்து ஒரு போன் வந்தால் சரியாகிவிடும்” என்றாராம் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரின் மனநிலை குறித்து நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும், இதேபோலத்தான் 40 சீட்டுகள் கேட்டு விடாப்பிடியாக நின்றது காங்கிரஸ் கட்சி. அப்போது மாநிலத் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியிடம், ’40 சீட்டுகளுக்குக் குறைந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாதீர்கள்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் ராகுல் காந்தி.

கடைசியில், சோனியா காந்தியிடம் தலைவர் ஸ்டாலினே போனில் பேசி நிலைமையை விளக்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில், கே.எஸ்.அழகிரிக்கு சோனியா காந்தியின் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது. எந்த பிரச்னையும் செய்யாமல், தி.மு.க அளித்த 25 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி.

ஸ்டாலின், ராகுல் காந்தி

இதனால் எழுந்த மனமாச்சரியத்தால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்த தலைவர் ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்மொழியவில்லை. வெளிப்பார்வைக்கு சகோதரர்களாக பழகினாலும், உள்ளுக்குள் சிற்சில மனக்கசப்புகள் இருக்கவே செய்கிறது. ஆனால், சோனியாவிடம் நல்ல உறவில் இருக்கிறது தி.மு.க தலைமை. சோனியாவிடமிருந்து ஒரு போன்கால் சத்தியமூர்த்திபவனுக்கு வந்தால், இப்போது நிலவும் பிரச்னையெல்லாம் ஒரு நிமிடத்தில் சரியாகிவிடும். அதற்காகத்தான் கார்கே, ரேவந்த் ரெட்டியின் ரூட்டில் சோனியாவை ‘ரீச்’ செய்யப் பார்க்கிறார் முதல்வர். பிப்.22-ம் தேதிக்கு முன்னதாகவே எல்லாம் சுமூகமாகிவிடும்” என்றார் நம்பிக்கையுடன்.

எல்லாம் சுமூகமாகிவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது தி.மு.க. ஆனால், ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று பதிவு போட்டு, மீண்டும் அனலைக் கிளப்பப் பார்க்கிறார் மாணிக்கம் தாகூர். ராகுலின் எண்ணவோட்டம் தி.மு.க-வுக்கு எதிர்திசையில் இருப்பதால், சோனியா காந்தியையே மலைபோல நம்பியிருக்கிறது அறிவாலயம். அவர்கள் எதிர்பார்ப்பின்படி, சோனியாவிடமிருந்து போன்கால் வருமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்...

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! – இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும்...

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' – மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே...

அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06

‘மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி அரிசி நிச்சயம்...’ நீங்கள்...