9
March, 2026

A News 365Times Venture

9
Monday
March, 2026

A News 365Times Venture

`அதிமுக கூட்டணி… சாரி, மோடியும், அமித் ஷாவும் கோபித்துக்கொள்வார்கள்" – முதல்வர் ஸ்டாலின்

Date:

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள் சந்திப்பு என தமிழ்நாட்டை வலம்வரத் தொடங்கிவிட்டனர். அதன் அடிப்படையில், தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம், சிறுகனூரில் இன்று கலாசார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெற்றி பெறட்டும்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். துணை முதல்வரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார்.

ஸ்டாலின்

கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு, மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மாநாடுகள் நடத்திவருகின்றனர். 10 லட்சம் பேர் கலந்து கொண்டிருக்கும் இந்த மாநாட்டில் என் வயது குறைந்திருப்பதாக உணர்கிறேன். உங்களால்தான் வளர்ந்து, உயர்ந்தேன். உங்களுக்காகத்தான் வாழ்கிறேன். கலைஞர் முதல் நான் வரை இந்தப் பாச உணர்வைப் பார்க்கிறேன். கிரிக்கெட்டில் ஆரம்பத்திலிருந்து ரன் எடுப்பது சரிதான். ஆனால், மேட்ச்சின் இறுதியில சிக்ஸ் அடுத்து கிராண்ட் வெற்றியாக மாற்றுவதுதான் இந்த மாநாடுகளின் நோக்கம்.

அமைச்சர் நேரு இந்த மாநாட்டை 200 ஏக்கரில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறார். இதன் மூலம் 200 தொகுதிகளை வெல்லவேண்டும் என சூசகமாக சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் தொடரட்டும் என்ற வார்த்தை இந்த ஸ்டாலினுக்கானது அல்ல. திராவிட ஆட்சி தொடரட்டும் என்பதுதான் இந்த முழக்கத்தின் நோக்கம் . இது 12-வது மாநாடு. இதில் 7 மாநாடுகள் இந்த திருச்சியில்தான் நடந்திருக்கிறது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என அரசியல் ஆளுமைகளுக்கும் இந்த திருச்சிக்கும் பெரும் தொடர்புகள் இருக்கிறது. கலைஞர் முதல் முதலாக சட்டமன்றம் நுழைய உதவிய மாவட்டம் திருச்சி குளித்தலை.

Stalin
Stalin

இந்தியாவிலேயே ஆட்சிக்கு வந்த முதல் மாநிலக் கட்சியாக வளர்த்தெடுத்தார் அறிஞர் அண்ணா. அதன் வழியிலே தொடர்ந்து 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தலைவர் கலைஞர். 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உங்கள் ஆதரவுடன் என் தலைமையில் ஆட்சி அமைந்தது. 7வது முறை மட்டுமல்ல இனி திராவிட கழகம்தான் எப்போதும் ஆட்சியை வழிநடத்தும் என்பதை உணர்த்தத் தான் இந்த மாநாடு.

நான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கோ, சிலர் அமைச்சராக வேண்டும் என்பதற்கோ இந்த தேர்தல் அல்ல. தமிழினத்தைக் காக்க, தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்ட ஒரே படை இந்த சிகப்பு – கருப்புப் படைதான் முடியும். நமக்கென ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டை காத்தவர்கள், தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தவர்கள், தமிழினத்துக்காக போராடியவர்கள் நாம். தமிழ்நாடு நம்மை நம்பிதான் இருக்கிறது. நாம் தமிழ் மண்ணை நம்பிதான் இருக்கிறோம்.

2021 தேர்தலுக்கு முன்பு இதே திருச்சியில், இதே இடத்தில ஏழு இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். 1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு 2. மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி 3.குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் 4. அனைவருக்கும் உயர்தர கல்வி உயர்ந்த மருத்துவம் 5. எழில்மிகு மாநகரங்கள் 6. உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் 7. அனைவருக்கும் அனைத்துக்குமான தமிழ்நாடு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் இந்த ஏழு இலக்குகளையும் நம்முடைய ஐந்தாண்டு ஆட்சி திட்டங்களால் நிறைவேற்றி இருக்கிறோம். அதனாலதான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவற்றை நம்முடைய எதிரிகளே மனதிற்க்குள் ஒத்துக்கொள்வார்கள். தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கூட NO 1 மாநிலம் தமிழ்நாடு எனச் சொல்கிறது.

உலக பத்திரிக்கைகளும் ‘சூப்பர் ஸ்டேட் தமிழ்நாடு’ எனப் பாராட்டுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனை நெருக்கடிகள், எத்தனை பிரச்சனைகள் எல்லாவற்றையும் தகர்த்து முன்னேறி இருக்கிறோம். சென்னையில் 2030-க்கான 14 உறுதி மொழிகளை ‘ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்’ என அறிவித்தேன். அந்த மேடையில் அமைச்சர்கள் ஒவ்வொரு துறையிலும் என்ன சாதித்திருக்கிறோம் எனச் சொன்னார்கள். எல்லாத் துறையிலும் பலமடங்கு சாதனைகளைச் செய்திருக்கிறோம். இதுதான் வளர்ச்சி அதனால்தான் வரலாற்றில் இல்லாதளவு 14 ஆண்டுகள் கழித்து நம்ம ஆட்சியில் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை நம் மாநிலம் அடைந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதனால்தான் நான் அடிக்கடி வெல்வோம் 200 எனச் சொல்லிவருகிறேன். அரசு திட்டங்களில் பலனடைந்தவர்கள் வாக்களித்தாலே போதும் அடுத்த ஆட்சியும் நம்முடையதுதான். நீங்கள் பிரசாரத்துக்குப் போகும்போது பார்க்கும் அனைவரும் அரசின் திட்டங்களால் பலனடைந்தவர்களாகதான் இருப்பார்கள். விரைவில் விரிவான தேர்தல் அறிக்கை தங்கை கனிமொழி தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அதுவும் வெளியிடுவோம். மற்ற அரசியல் கட்சிகளெல்லாம் இன்ஸ்டால்மெண்டில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள். அதில் நம் அரசு நிறைவேற்றிய திட்டங்களை காபி அடித்து சொல்கிறார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை. நாம் நிறைவேற்றிய திட்டங்களை அவர்கள் நினைத்தாலும் மாற்ற முடியாது. மகளிர் உதவித் தொகையை நிறுத்த முடியுமா? அதனால்தான் அதை அதிகப்படுத்துவோம் எனச் சொல்கிறார்கள்.

இப்படி யாராலும் மாற்ற முடியாத திட்டங்கள்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய திட்டங்கள். அவர்களின் தேர்தல் அறிக்கைக்கு கண்டென்ட் கொடுக்கிறதே இந்த ஸ்டாலினுடைய திட்டங்கள்தான். இவ்வளவையும் மக்களுக்காக செய்துவிட்டுதான் வாக்கு கேட்கிறோம். அதிமுக கூட்டணி… சாரி, மோடியும், அமித் ஷாவும் கோவித்துக்கொள்வார்கள். என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது. நமக்கு வரவேண்டிய நிதிகளை தடுத்து நிறுத்தினார்கள். கோவை மதுரை திருச்சி மெட்ரோ உள்ளிட்ட எந்த உள்கட்டமைப்புக்கும் அனுமதி தரவில்லை. ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்தார்கள்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நோ சொன்னவர்களுக்கு தமிழ்நாடும் நோ சொல்லும். இந்த தேர்தல் தமிழ்நாடு vs என்.டி.ஏ கூட்டணி என்றேன். இதை பார்த்து சில எதிர்கள் இது எப்படி சாத்தியம் என விமர்சித்தார்கள். தி.மு.க என்கிற மாபெரும் இயக்கம் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரக்கூடிய கட்சி அல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கக்கூடிய கட்சி. எங்களுக்கு தமிழ்நாட்டின், எங்கள் மொழியின் உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு தெரியும். அந்த எதிரியை எதிர்க்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க என்பதும் மக்களுக்கு தெரியும்.

பாஜக ‘காவி’ அரசியலைத் தமிழ்நாட்டிற்குள் திணிக்கப் பார்க்கிறது. அ.தி.மு.க என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு வந்தாலும், தமிழக மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமி தனது சொந்த நலனுக்காகவும், மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் அ.தி.மு.க-வை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார். பீகாரில் நிதிஷ்குமாரை வைத்து காய்களை நகர்த்திவிட்டு, இப்போது அங்கேயே பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கப் பார்ப்பது போல, தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க-வை அழித்துவிட்டு உள்ளே வரப் பார்க்கிறார்கள்.

ஸ்டாலின்

பா.ஜ.க எத்தனை மிரட்டல்களை விடுத்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை அவர்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க-வின் பருப்பு வேகலாம், ஆனால் தமிழ்நாட்டில் அவர்களின் பாட்ஷா பலிக்காது.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல; அது “தமிழ்நாடு அணி vs டெல்லி அணி” இடையிலான மோதல். இதில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டுமானால், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்.

எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மக்கள் மத்தியில் இந்தச் செய்தியை இடைவிடாமல் கொண்டு செல்ல வேண்டும். உதயசூரியன் சின்னத்திற்கு எந்த அளவிற்கு உழைக்கிறீர்களோ, அதே அர்ப்பணிப்பை கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் கொடுக்க வேண்டும். நமது கூட்டணி வெறும் தேர்தலுக்காக அமைந்தது அல்ல, அது கொள்கையினால் பிணைக்கப்பட்டது.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தது இந்த ஸ்டாலினைத்தான். கடந்த ஐந்து ஆண்டுகளை விட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் கூடுதலான சாதனைகளைச் செய்யப் போவதாக மக்களிடம் நம்பிக்கையோடு சொல்லுங்கள். திராவிட மாடல் ஆட்சி சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பதை மக்கள் அறிவார்கள்.

“தமிழ்நாட்டை மீண்டும் முதன்மை மாநிலமாக்க நான் தயாராக இருக்கிறேன்; நீங்களும் தயாராக இருக்கிறீர்களா?” என்று வினவிய முதல்வர், 2026-லும் திராவிட மாடல் ஆட்சி (2.0) தொடரவும், ஏழாவது முறையாக திமுக வெற்றி பெற்று சாதனை படைக்கவும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் போர் விவகாரம்: “இதுதான் இந்தியாவின் நிலைபாடு" – அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான...

“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ… பனையூரில் முகாமிடும் விஜய்” – பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம்...