16
Sunday
March, 2025

A News 365Times Venture

அடையாறு சீரமைப்பு: `மீண்டும் ரூ.1500 கோடி' – ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி; என்னதான் நடக்கிறது?

Date:

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாளமான அடையாறு. இன்றைய தலைமுறையினரைப் பொறுத்தவரை, அடையாறு என்றால், மேம்பாலத்தைக் கடந்து செல்கையில் மூக்கைப் பிடிக்க வைக்கின்ற, நாற்றமும் கருகருவென்று சாக்கடைக் கழிவு நிறைந்த நீரும் மட்டுமே தெரியும். ஆனால் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் படகு போக்குவரத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்திருக்கின்றன இந்த ஆறுகள்.

அடையாறு நதி

வட சென்னைக்கு கொசஸ்தலை ஆறு, மத்திய சென்னைக்கு கூவம் ஆறு, தென் சென்னைக்கு அடையாறு என இவ்வளவு பரபரப்பாக இயங்கும் சென்னை மாநகருக்குள், மூன்று நதிகள் அமைந்திருப்பதெல்லாம் இயற்கையின் பெரும் வரம். ஆனால் அதைச் சரியாக பாதுகாக்கத் தவறியதன் விளைவாக சென்னை என்றாலே, மூக்கைத் துளைக்கின்ற நாற்றத்தோடு கழிவு சூழ்ந்திருக்கும் நதிகளே அடையாளமாக மாறிவிட்டது. ‘நகரங்கள் வளரும்போது, அந்த நகரத்துக்குள் ஓடும் நதிகள் பலியாக்கப்பட வேண்டும்’ என்ற இந்தியாவின் நகரத் திட்டமிடுதலில் எழுதப்படாத விதியாகவே அன்று முதல் இன்றுவரை ஆறுகளின் பலி தொடர்ந்துவருகிறது.

அதன் விளைவாக இப்போது, ‘கூவம் மாதிரி மனசுக்குள்ள குப்பையை சேர்க்காதே…” என குப்பையை கூவத்துடன் வார்த்தையிலும் சேர்த்து பிறருக்கு உபதேசிக்கிறோம். இந்தச் சூழலை மாற்ற வேண்டிய முக்கியக் கடமையும், பொறுப்பும் நம்மை ஆண்ட, ஆளும் அரசுகளுக்கும் இருக்கிறது. அதை உணர்ந்த அரசுகள், மிக நுட்பமாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்… செய்துவருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

1967-ல் `கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கி, ‘சென்னை நதிநீர் பாதுகாப்புத் திட்டம்’ ‘தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம்’, ‘நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’, ‘கூவம் நதி மறு சீரமைப்புத் திட்டம் என கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் எனக் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், அந்த நதிகளை சுத்தம் செய்கிறோம் என்றப் பெயரில் பல்வேறுமுறை நிதி ஒதுக்கீடுகளை செய்திருக்கிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் ‘ரூ.1,500 கோடியில் அடையாறு சீரமைக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டடிருக்கிறது. இதுவரை கண்கூடாக எந்த மாற்றமும் நிகழ்ந்தப்பாடில்லை என்றக் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் சுந்தரராஜன் பேசியபோது, “ஒரு நதி இப்படி மோசமாகிவருகிறது என்ற குற்றவுணர்ச்சி முதலில் மக்களுக்கு இருக்க வேண்டும். அதைச் சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு நிர்வாகத்துக்கு இருக்க வேண்டும். இப்படித்தான், இங்கிலாந்தின் கேம்ஸ் நதி 1950-ல் இறந்துவிட்டது என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குப்பிறகு கடுமையாக முயற்சி செய்து 2000-ல் அந்த நதிக்கு உயிரூட்டி மீட்டிருக்கிறார்கள். இன்னும் அந்த நதிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது அந்த நாடும், அந்த நாட்டு மக்களும். ஒரு நதி கெட்டுப்போவதற்கு அடிப்படை கழிவுநீர் நதியில் கலப்பதுதான். அடையாற்றின் சிக்கலும் அதுதான்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

அந்தப் பகுதியின் நகராட்சி தொடங்கி ஹோட்டல், வீடு என அனைத்துக் கழிவுகளும் அடையாற்றில்தான் கலக்கிறது. 1950-க்குப் பிறகு மெல்ல மோசமாகத் தொடங்கிய சென்னை நதிகள், 80, 90-களில் மிகவும் மோசமாகிவிட்டது. இதற்கு தீர்வு, சிறியளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஒவ்வொருப் பகுதியிலும் அமைக்க வேண்டும். அப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆற்றில் விடலாம். நகரை நிர்வாகம் செய்யக்கூடியவர்களும், மக்களும் இதில் கவனம் செலுத்தினால்தான் சென்னையின் ஆறுகளை மீட்க முடியும். 50 ஆண்டுகளாக, நதியை மீட்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அளவிற்கு இது சிரமமான காரியமில்லை. உலகளவில் இப்படி இருந்த பல நதிகள் மீட்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.” என்றார்.

அறப்போர் ஜெயராம்

அதைத் தொடர்ந்து அறப்போர் இயக்கத்தின் செயல்பாட்டாளர் ஜெயராமை தொடர்புகொண்டோம். அவர், “அடையாறும், கூவமும் சாக்கடைகளல்ல. அது மிகத் தெளிவான நண்ணீர். ஆனால், அந்த நதிகள் கழிவு நீராக மாற முக்கியக் காரணம், இந்நாள், முன்னாள் ஆட்சியாளர்களே… வீடு, ஹோட்டல், கடை போன்றவற்றின் கழிவு நீரை ஆற்றில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். பக்கிங்ஹாம் கால்வாயில் தொடங்கி, எல்லா நதிகளும் அரசின் இதுபோன்ற திட்டங்களால்தான் வீணானது. இந்த ஆறுகளை சுத்தம் செய்யவேண்டுமென்றால் முதலில் கழிவுநீர் அதில் கலப்பதை தடுக்க வேண்டும்.

அறப்போர் இயக்கம்

அதற்கு ஆற்றுக்கு கழிவுநீரைக் கொண்டுவந்து சேர்க்கும் அந்தப் பைப்லைன்களை அடைத்து, அந்தக் கழிவுநீர் நேரடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு போகும்படியான வழி ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்றவாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை நோக்கி அரசு எப்போதோ நகர்ந்திருக்கவேண்டும். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 100 கோடி லிட்டர் கழிவுநீர், நீர்நிலைகளில் விடப்படுகிறது. சென்னைக்கு ஒரு நாளுக்கு 800 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கிறோம் என்கிறது அரசு. சென்னையில் மூன்றில் ஒருமடங்குதான் மெட்ரோ தண்ணீர் பயன்பாடு இருக்கிறது.

இரண்டுமடங்கு தண்ணீர் பயன்பாடு நிலத்தடியிலிருந்து எடுக்கப்படுகிறது. அப்படியானால், ஒரு நாளுக்கு சென்னையில் மட்டும் 2,400 எம்.எல்.டி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதில் 20 சதவிகித தண்ணீர் பூமிக்குள் சென்றுவிடும். மீதமிருக்கும் 80 சதவிகித கழிவு நீரைதான் சுத்திகரிக்க வேண்டும். அப்படியானால், 1800 – முதல் 2000 எம்.எல்.டி தண்ணீரை சுத்திகரிக்குமளவிலான சுத்திகரிப்பு நிலையங்கள் தேவை. அரசிடம் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களில் 700 – 800 எம்.எல்.டி தண்ணீரை மட்டுமே சுத்திகரிக்க முடியும். மீதமிருக்கும் கழிவுநீர் நதிகளில்தான் விடப்படுகிறது. ஆறுகளை சுத்தப்படுத்த ஒதுக்கப்படும் தொகை, ஆறுகளை அகலப்படுத்தி கணக்குகாட்டிவிடுகிறார்கள்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

ஆனால், இந்தப் பிரச்னைக்கு தீர்வாக, கூடுதல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கும் செயல்முறையை அரசு செயல்படுத்த வேண்டும். நகரமயமாக்கல் எனும்போது சில சிக்கல்கள் வரும். ஆனால் அதற்கான திட்டமிடல் நம் அரசிடம் இருக்கிறதா என்றக் கேள்வியும் தவிர்ப்பதற்கில்லை. பிற நாடுகளில் ஒரு நகரம் உருவாகிறது என்றால், அதற்கான மின்சாரம், சாலை, கழிவுநீர் வெளியேற்றம் என எல்லா திட்டங்களும் இருக்கிறதா என்று சோதித்ததற்குப் பிறகுதான் கட்டடம் கட்டவே அனுமதிப்பார்கள்.

தமிழ்நாட்டிலும் இதைக் கண்காணிக்க CMDA (Chennai Metropolitan Development Authority) என்ற நிர்வாகம் இருக்கிறது. ஆனால் அவர்கள் இதைவிட்டுவிட்டு, ஏரிப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்யப்போகிறோம், நடைபதை அமைக்கப்போகிறோம், அழகுப்படுத்தப்போகிறோம் எனச் சம்பந்தமில்லாத வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நீர் நிலையத்தில் பார்க் போன்ற சூழலை உருவாக்கினால் அந்த நீர் நிலையம் சுருங்கும் என்பதுதான் உண்மை. அப்படி சுருங்கினால் அந்த ஏரி கழிவுநீராகத்தான் மாறும்.

அப்ரூவல்…

அதனால்தான் CMDA முறையான நிர்வாகமாக செயல்படுவதில்லை என்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. இதுகூட வேண்டாம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பது தொடர்பாக அரசிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா… என்பதுகூட மக்களுக்குத் தெரியாத நிலை இருந்தால் நதிகள் தொலைவது உறுதி” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை தொடர்பு கொண்டபோது, “நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அடையாறு எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும். எங்கள் ஆட்சியில், அடையாறின் கால்வாய் தூர்வாரப்பட்டது தொடங்கி, வெள்ளத் தடுப்பு வரை எனப் பலப் பணிகளை எங்கள் அரசு திறமையாக முடித்திருக்கிறது. சில திட்டங்களைச் செயல்படுத்துவது மக்களுக்கு நேரடியாகத் தெரியும். சில திட்டங்களை செயல்படுத்துவது வெளியில் பெரிதாகத் அப்படித் தெரியாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அடையாறு பணிகள் தொடர்பாக அறிந்துகொள்ள கடந்த ஆட்சியில் இருந்ததையும் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டப் பணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும். கடந்த ஆட்சியின்போது அடையாறில் வந்த வெள்ளத்தில், அந்தப் பகுதியில் 9 பேர் உயிரிழந்தார்கள். இந்த முறை வெள்ளம் வந்தபோது அடையாறுப் பகுதி பாதிக்கப்பட்டதா… எனவே அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதற்கு பிறகுதான் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது சரியான நடைமுறைதான்.

ஆனால், நம் நாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துவிட்டு வீட்டைக் கட்டமுடியாது. எந்தப் பக்கம் வாசல் வேண்டும், எப்படி கழிவு நீர் வெளியேற வேண்டும் என்பதெல்லாம் அந்த வீட்டைக் கட்டுபவரின் முடிவு. ஏற்கெனவே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வைத்துவிட்டு அதன்படிதான் வீடு கட்ட வேண்டும் என எப்படிக் கூறமுடியும். பெரியளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தலாம்.

அடையாறு

அல்லது அரசே வீடுகளைக் கட்டி மக்களுக்கு வழங்குகிறது என்றால், அந்த இடங்களில் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும். இதுபோன்ற திட்டங்களை வளர்ந்த நாடுகளில் செயல்படுத்துகிறார்கள்தான். ஆனால் நாம் வளர்ந்துவரும் நாடு… அதனால் இந்த யதார்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு தகுந்தபடி இந்த அரசால் எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்து ஆற்றின் வளத்தைக் காப்போம்” என்றார்.

இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன… கமெண்ட்டில் பதிவிடுங்கள்!

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: "விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து" -அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி...

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்…" – என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி...

Railway Exam: "தமிழக தேர்வர்களுக்கு 1,500 கிமீக்கு அப்பால் தேர்வு மையம்" – சு.வெங்கடேசன் கண்டனம்

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco...

Vijay : 'விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்' – விஜய் காட்டம்

தமிழகத்தின் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி தமிழக வெற்றிக்...
12:03