11
February, 2026

A News 365Times Venture

11
Wednesday
February, 2026

A News 365Times Venture

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

Date:

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (SPSEs) குறித்து ஆய்வு செய்து, அதன் முதன்மை அறிக்கையில் 2022-23 நிதியாண்டுக்கான விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

அதில், இந்திய அளவில், அதிக நஷ்டத்தில் இயங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ரூ.16,048 கோடி நஷ்டத்தைச் சந்தித்து, மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசம், ரூ32,430 கோடி நஷ்டத்தில் முதலிடத்திலும், ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

அந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் 2022-23-ல் ரூ.9,192 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்து, முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

மத்திய அரசு

மேலும், நிதிக்குழு தன் அறிக்கையில், “பொதுத்துறை நிறுவனங்களின் மோசமான நிதி நிலை, மாநில பட்ஜெட்டுகளுக்குச் சுமையாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் சப்சிடி, மானியங்கள், பங்கு முதலீடு, கடன்கள், உத்தரவாதங்கள் வழங்கி வருகின்றன.

மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் இணை நிறுவனமான தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் 2024-25-ல் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ஆனால், இதுவும் அரசின் ரூ.15,772 கோடி டாரிஃப் சப்சிடி மற்றும் ரூ.16,107 கோடி நஷ்ட ஏற்பு மூலமே சாத்தியமானது. எனவே, நஷ்ட நிறுவனங்களை மறுஆய்வு செய்து, மூடுதல் அல்லது தனியார்மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். இது மாநில அரசுகளின் நிதி நிலையை மேம்படுத்த உதவும்” எனவும் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

எனவே, மத்திய அரசின் 16-வது நிதிக்குழு ஆய்வறிக்கையை முன்வைத்து அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம். “பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் தி.மு.க ஆட்சியின் நிர்வாகச் சீரழிவு” எனக் காட்டமாகப் பேசத் தொடங்கினார்.

Kovai Sathyan - கோவை சத்யன்
Kovai Sathyan – கோவை சத்யன்

“102 பொதுத்துறை நிறுவனங்களில் கிட்டத்தட்ட 35 நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக 16-வது நிதிக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. இது அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு நேரடி சான்று. தமிழகத்தில் தற்போது நிர்வாகம் என்ற ஒன்றே இல்லை.

102 நிறுவனங்களில் 35 நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பது ஒருபுறம் என்றால், அந்த நிறுவனங்களின் நிகர மதிப்பையே (Net Worth) இந்த அரசு காலி செய்துவிட்டது. நிறுவனங்களின் நற்பெயரை (Goodwill) வைத்து மறுசீரமைப்பு செய்யாமல், அவற்றின் சொத்துக்களை அடமானம் வைத்தே இந்த அரசு காலத்தைக் கடத்துகிறது.

உதாரணமாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திடம் ரூ.36 கோடி மதிப்பிலான சொத்து மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு ரூ.10,000 கோடி கடன் வாங்குவதற்கு உத்தரவாதம் கொடுக்கும் வேலையில் இறங்கியது.

இந்த தி.மு.க ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால், தமிழ்நாடு ஏறத்தாழ 14.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது அரசு. இத்தகைய பெரும் கடன் வாங்கியும், மக்களுக்கு என்ன நல்ல திட்டங்கள் செய்தார்கள் என்று கேட்டால் பதில் இல்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மின்சாரத் துறை ரூ.1.80 லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததால், ஜெயலலிதா ஆட்சியில் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், இந்த அரசு பதவி ஏற்றதும் அதில் கையெழுத்திட்டது.

உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் ஒருமுறை கூட மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. இப்போது இந்த ஆட்சி நான்கு முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

இப்போது கூட கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏறத்தாழ 3% விலை உயர்த்தியிருக்கிறார்கள். இத்தனை முறை விலை ஏற்றியும் மின்சாரத் துறையில் நஷ்டம் என்றால் இவர்களின் நிர்வாகத்திறனை என்னவென்று சொல்வது?

உதய் மின் திட்டத்தின் மிக முக்கியமான விஷயம் மின்சார விநியோக (மின்சார பகிர்மான) கட்டமைப்பை திறம்படுத்துவது. அதற்காகத்தான் ஏறத்தாழ 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆனால் மூன்று வருடங்களாக இந்தத் திட்டம் தூங்கிக் கொண்டிருக்கிறது. டெண்டர் கூட விடவில்லை. வெறும் ஒன்றே கால் கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் மட்டுமே நிறுவப்பட்டன. அதிலும் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்திருக்கின்றன. சென்னையில் தி.நகர் போன்ற பகுதிகளில் எல்லாம் ஏறத்தாழ ஒரு லட்சம் மீட்டர் பழுதடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மின்சார வாரியம்
மின்சார வாரியம்

தமிழ்நாடு மாற்று மின்சாரமாக, காற்றாலை மின்சாரத்தில் ஜெயலலிதா ஆட்சியின் 4000 மெகாவாட் வரை உற்பத்தி செய்து கொண்டுவந்தார்கள். ஆனால் காற்றாலை மின்சார உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்காமல் இரண்டு வருடங்களாகத் தாமதிக்கிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் ஆவினை சிங்கப்பூருக்குக் கொண்டுசென்றோம். ஆனால் இந்த ஆட்சியில், ஆவின் நிர்வாகத்தை மெல்ல மெல்ல முடக்கி, பால் விலையை ஏற்றியதைத் தவிர இவர்களின் சாதனையாக வேறு எதைச் சொல்ல முடியும்?

அம்மா சிமெண்டுக்குப் பதிலாக வலிமை சிமெண்ட் என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அதிலும் விலை உயர்த்தினார்கள். சந்தை விலை 280 ரூபாய் இருந்தபோது, வலிமை சிமெண்டை 360 ரூபாய்க்கு விற்றார்கள். இப்போது அதுவும் பெரிதாகக் கிடைப்பதில்லை.

அப்படியென்றால் இந்தப் பணம் எல்லாம் எங்கே போகிறது? நஷ்டம் என்ற கணக்கு உண்மையிலேயே நஷ்டமா, இல்லை இவர்கள் செய்யும் ஊழலால் வரும் நஷ்டமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையே இல்லை என்பது தெளிவாகிறது. எல்லாமே வெறும் விளம்பரம் அவ்வள்வுதான்.

விலைவாசி உயர்வு... (inflation)
விலைவாசி உயர்வு… (inflation)

உதாரணத்துக்கு மகளிருக்கான இலவசப் பேருந்து… பேருந்தே சரியாக வருவதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

ஐந்து ஆண்டுகளில் எட்டு கோடி பேருந்து பயணம் என்று கூறுகிறார்கள். இதை விவரமாகப் பார்த்தால் உண்மை புரியும். எட்டு கோடியை ஐந்து வருடங்களுக்குப் பிரித்தால், நாளொன்றுக்கு 6 லட்சம் பயனாளிகள் மட்டுமே பயன்பெறுகிறார்கள். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.5 கோடி. ஆனால் வெறும் 6 லட்சம் பயனாளிகளுக்காக மின்சார உற்பத்தில் கைவைத்தால் கடன்தானே வரும்.

தேர்தல் வருகிறது என்பதால், 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கிறார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் அரசு இது.

நான்கு முறை மின்சார விலை உயர்த்தியிருக்கிறார்கள், சொத்து வரி, குப்பை வரி எனப் பல்வேறு துறைகளில் வரி உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குகிறார்கள், விலை உயர்வுகளால் ரூ.1.16 லட்சம் கோடி கூடுதல் வருமானம் வருகிறது. இந்தப் பணம் எங்கே போகிறது?

பொருளாதார மந்தநிலையைக் கட்டுப்படுத்த நிதி மேலாண்மையில் கேபிடல் எக்ஸ்பெண்டிச்சர் (மூலதனச் செலவு) அவசியம். ஆனால் அதைக் கூட இந்த அரசு திட்டமிடவில்லை.

நிதித்துறை அமைச்சரின் தலைமையில் ஒரு பொருளாதார ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தப் பொருளாதார நிபுணர்கள் கொடுத்த ஒரே அறிவுரை கடன் வாங்குவது. அதன்படி தமிழ்நாட்டை நம்பர் ஒன் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியது மட்டுமே அவர்களின் சாதனை.

அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்கள் போராட்டம்

காலியாக உள்ள 5 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகக் கூறினார்கள். எத்தனை பேரை நியமித்தார்கள்?

மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்தான் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். எனவே, பொதுத்துறை சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்த அரசின் சாதனை” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு அரசுக்கு முறையான நிர்வாகத் திறமையும், அது தொடர்பான அறிவும் இருந்தால் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக நடத்த முடியும். ஆனால், இந்த அரசுக்கு அது கிடையாது. அதனால்தான் இவ்வளவு நஷ்டத்தை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது.

அரசு கருவூலத்திற்குச் செல்ல வேண்டிய வருவாய், அந்தத் துறைசார்ந்த அமைச்சருக்கும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே செல்கிறது என்றால் கருவூலம் எப்படி நிரம்பியிருக்கும்? மின்சார வாரியம் மற்றும் டாஸ்மாக் ஆகிய துறைகளின் வருமானம் நேர்மையாகக் கணக்கிடப்பட்டால், அது தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

உதாரணமாக, 30,000 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை 50,000 கோடியாக உயர்த்தியதைச் சாதனையாகச் சொல்கிறார்கள். முறையான நிர்வாகம் இருந்தால் இது இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும்.

போக்குவரத்துத்துறையில் இன்று பேருந்துகள் அனைத்தும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கின்றன.

மழை பெய்தால் பஸ்ஸுக்குள்ளே மழை நீர் வடிகிறது. டயர் வெடிப்பதும், பிரேக் பிடிக்காமல் போவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. முறையான சீர்திருத்தம் செய்யத் துப்பில்லாத இந்த அரசு, போக்குவரத்துக் கழகங்களை நலிவடையச் செய்துவிட்டது.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

அ.தி.மு.க ஆட்சியில் அரசு கருவூலம் உபரி நிதியுடன் (Surplus) இருக்கும். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன்… 1991 முதல் 2021 வரையிலான ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திலும் பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலை எப்படி இருந்தது என்பது குறித்த ‘ஒப்பீட்டு அறிக்கையை’ வெளியிடத் தயாரா? எல்லாவற்றிலும் ஊழல் கரைபுரண்டு ஓடுவதால்தான், பொதுத்துறை நிறுவனங்கள் இன்று பாதாளத்திற்குச் சென்றுவிட்டன” என்றார்.

மத்திய அரசின் நிதி அறிக்கை, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “16-வது நிதிக்குழு அறிக்கையில் பொதுத்துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிதிநிலை அறிக்கைக்கு முன்னர் வெளியிடப்பட்ட பொருளாதாரக் கணக்கெடுப்பில், பெண்கள் பாதுகாப்பு, தோழி விடுதி, கல்வியில் மாணவர்களை மீண்டும் கொண்டு வருதல், தொழிற்சாலைகள் என 10 இடங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது.

ஜே. கான்ஸ்டன்டைன் ரவிந்திரன்
ஜே. கான்ஸ்டன்டைன் ரவிந்திரன்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பா.ஜ.க ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், மத்திய அரசு ஒத்துக்கொள்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறது, முன்மாதிரியாக எடுக்கிறது. ஆனால் பா.ஜ.க தலைவர்களுக்கும் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வுக்கும் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லை.

16வது நிதிக்குழு சுமார் 35 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும், அதில், 3-4 ஆண்டுகளாகத் தொடர்ந்து நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களை மூட வேண்டும் அல்லது தனியார்மயமாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு இதுவரை எந்தப் பொதுத்துறை நிறுவனத்தையும் மூடவுமில்லை. தனியார்மயமாக்கமில்லை.

தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் சேவைமனப்பான்மையுடன் இயங்குகின்றன. அதை நாம் மானியத்தில் ஈடுகட்டுகிறோம். மின்சாரத்துறை, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை, உணவுப் பொருள்கள் விநியோகத்துறை போன்றவை மக்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள். இதை உற்பத்தி நிறுவனங்களாகப் பார்க்கக் கூடாது. இவர்கள் குறிப்பிடும் நஷ்டக்கணக்குக்குச் சேவைதான் காரணம்.

இந்தச் சேவை நிறுவனங்களை நாம் தனியார் நிறுவனமாக ஆக்க முடியாது. தனியார் துறையாக மாற்றினால் சேவைகள் பாதிக்கப்படும். பா.ஜ.க அரசு பல அரசு நிறுவனங்களை தனியாருக்குக் கொடுத்தது. இன்னும் ஐந்து வருடங்கள் அவர்கள் ஆட்சியில் இருந்தால், அவர்களால் மக்களுக்கு எந்தச் சேவையையும் கொடுக்க முடியாது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், எரிவாயு சிலிண்டர் – இவற்றைக் கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால், தமிழ்நாடு அப்படியல்ல…. இங்கு நிர்வாகக் குறைபாடு இருக்கலாம். அதை மறுக்கவில்லை. அதேநேரம் மக்களுக்கான சேவையையும் திராவிட மாடல் அரசு குறைக்கவில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்தச் சேவைகளால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்திருக்கிறதா என்பதுதான். 2021-ல் ஆட்சியைக் கையில் எடுக்கும்போது ரூ. 17.16 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே மொத்த உற்பத்தி இருந்தது. இன்றைக்கு அது ரூ.33.56 லட்சம் கோடியாக இரட்டிப்பு உற்பத்தி உயர்ந்துள்ளது. எப்படி சாத்தியமானது? எனவே, அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சேவை என்பது மனித வள மேம்பாட்டுக்குரியது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவளக் குறியீட்டில் தமிழ்நாட்டுக்குச் சமமாக இன்று எந்த மாநிலமும் இல்லை. கல்வி, மனித வளம், குழந்தைப் பிறப்பின்போதான இறப்பு குறைவு முதல் ஒரு மனிதனுக்குத் தேவையான கலோரி வரை 99% தமிழ்நாட்டில் கிடைக்கிறது. இவை எல்லாம் எப்படி கிடைக்கிறது?

பொருளாதார வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கும். பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும், ஆனால் சமூக வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மகளிர் இலவசப் பேருந்து
மகளிர் இலவசப் பேருந்து

மனம் திறந்து சொல்கிறேன் – எங்களுடைய நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஊழல், லஞ்சம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் 80% மக்கள் நிம்மதியோடு தூங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது.

சாதி மறுப்பு திருமணம் முதல், பெண்களுக்கான முன்னேற்றம் வரை எல்லாமே எடுத்த உடனே நடந்துவிடவில்லை. இந்தச் சமூக மாற்றத்துக்கு நாள்கள் ஆகின. எதை விதைக்கிறோமோ அதன் விளைச்சலை அடுத்த தலைமுறையில்தான் உணர முடியும். சமூக வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சி. சமூக வரலாறுதான் வரலாறு.

எனவே, ஒரு சமூகம் தனது வளர்ச்சிக்காகச் செலவழிக்கப்படுவதை நீங்கள் செலவு என்று பார்க்கிறீர்கள். நாங்கள் அதைச் சேவை என்று பார்க்கிறோம். இந்தச் சிந்தனை வேறுபாடு இருந்துகொண்டேதான் இருக்கும்.

இந்த நஷ்டக்கணக்குகளால்தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லையா என்றால், அப்படியல்ல…

அரசு ஊழியர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படியான எந்த நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்கவில்லை. அவர்களின் ஊதியத்தில், சலுகைகளில் குறைக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அரசுக்கு இருக்கிறது. ஆனால், அடிப்படை வாழ்வாதாரத்துக்குக் கூட வழியில்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கரம் கொடுத்து தூக்கிவிட வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே, அரசு ஊழியர்கள் கொஞ்சம் பொறுமைகாக்க வேண்டும்.

மின்சாரத்துறையில் ரூ.9000 கோடி நஷ்டம் என்பது கற்பனை. இந்த முறை மின்சாரத்துறைக்கு நாம் கொடுத்த மானியங்களை வைத்து பராமரிக்க மட்டுமே முடிந்தது. புதிய முதலீடு செய்ய முடியவில்லை. இது உண்மை. புதிய முதலீடு இல்லாதபோது உற்பத்தித்திறன் குறையும். இது நமக்கு ஒரு சிக்கல். இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்தக் கடனையும் அடுத்த ஆட்சியில் சரி செய்வோம்.” என நம்பிக்கை தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப்...

மகாராஷ்டிரா: பாஜகவிற்கு மேயர் தேர்தலில் கைகொடுத்த உத்தவ் தாக்கரே; உட்கட்சி மோதலால் காங்கிரஸ் தோல்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப்...

தவெக: 'வேட்பாளரை இப்படித்தான் தேர்வு பண்ணப் போறோம்' – ஆனந்த் போட்ட கண்டிஷன்; அப்செட்டில் மா.செக்கள்?

விருப்ப மனு விநியோகம் ஆன்லைன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென...

நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album

`படம் தொடங்கினப்ப கருணாநிதி படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம்...