மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா கல்வியாளர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மராத்தியை தவிர்த்து மூன்றாவது மொழி விவகாராத்தில் மற்ற எந்த மொழியும் கட்டாயம் கிடையாது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மூன்றாவது மொழி விவகாரத்தில் மராத்தி தவிர்த்து வேறு எந்த மொழியும் கட்டாயம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். இதனை பிரதமரும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தவேண்டும். மத்திய அரசு மூன்றாவது மொழி கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறி தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ.2,152 கோடியை கொடுக்குமா?’’ என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
பட்னாவிஸ் ஸ்டாலினுக்கு பதில்..!
மு.க.ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ள தேவேந்திர பட்னாவிஸ், ”புதிய கல்விக்கொள்கை எந்த மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யவில்லை. ஆங்கிலம் தவிர்த்து மேலும் இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கும்படி மட்டுமே கூறுகிறது. மகாராஷ்டிராவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உட்பட மாணவர்கள் விரும்பும் எந்த மொழியையும் மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளலாம். பன்மொழிக்கொள்கையை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. யாராவது இந்தி படிக்கவிரும்பினால் உங்களுக்கு என்ன பிரச்னை?”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் 1 முதல் 5வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் தாதா புசே அளித்த பேட்டியில், “புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியும் கட்டாயம் கிடையாது. எனவே இந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தி விருப்ப பாடமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.