11
February, 2026

A News 365Times Venture

11
Wednesday
February, 2026

A News 365Times Venture

பாமகவுக்கு அடித்தளம் அமைத்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் | ‘வாவ்’ வியூகம் 05

Date:

வன்னியர்களுக்கு சமூக நீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை `சுருக்கமாக, விரைவாக’ என்று எந்த வடிவில் புரட்டிப் பார்த்தாலும் அதில் ராமதாஸை எள்ளளவும் விலக்கி வைக்க முடியாது. தான் சார்ந்த சமூகத்துக்கான போராட்டம்தான் என்றாலும் கூட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கும் ஊக்கமளித்த போராட்டமாக அமைந்ததோடு, பாமக என்ற கட்சியை தமிழகம் முழுவதும், குறிப்பாக வட தமிழகத்தில் அழுத்தமாகக் கொண்டு சேர்க்கும் வியூகமாக அமைந்தது.

1980-ம் ஆண்டில் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர் போராட்டங்களை அச்சங்கம் நடத்தியது. முதன்முதலாக 1980-ல் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இடஒதுக்கீடு மாநாடு நடந்தது, தொடர்ந்து, 1981 முதல் 1989 வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு சென்று வன்னிய மக்களைச் சந்தித்து சமூக நீதிப் போராட்டத்துக்கு ராமதாஸ் தயார்ப்படுத்தினார். தனியொருவனாக தான் மேற்கொண்ட அந்தப் பயணம் பற்றி இன்றளவும் பல பேட்டிகளில் ராமதாஸே பெருமிதமாகச் சொல்லி வருவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

1984-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், 1985-ல் சென்னை தீவுத் திடலில் நடந்த மாநாடு, 06.05.1986 அன்று தமிழ்நாடு முழுவதும் நடந்த ஒருநாள் சாலை மறியல் போராட்டம், பின்னர் 19.12.1986 அன்று நடந்த ஒருநாள் ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்டவை வன்னியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் குறிப்பிடத்தக்கவை. அத்தனையையும் ராமதாஸ் தன் தலைமையில் வன்னியர்களுக்காக முன்னெடுத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

21 பேர் உயிரிழந்த சம்பவம்

இந்தப் போராட்டங்களை பதிவு செய்யும்போது, வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 17.09.1987 முதல் 23.09.1987 வரை ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதை குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. 1980 தொடங்கி ஏழு ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் அவரைச் சந்திக்கக் கூட அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் 1987 செப்.17-ல் தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. அன்று தொட்டு ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

ராமதாஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக அரசு. ஆனால், ராமதாஸை சந்தித்த ஒரே மாதத்தில் எம்ஜிஆர் மறைந்தார். மீண்டும் தனது கோரிக்கைகள் கிடப்பில் போக, போராட்டங்களை மட்டும் ராமதாஸ் கைவிட்டுவிடவே இல்லை. இந்தச் சூழலில் தான், 1989-ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ராமதாஸும் மீண்டும் போராட்டத்தை அறிவித்தார்.

முந்தைய ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைப் பார்த்திருந்த கருணாநிதி, ராமதாஸை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் நீட்சியாக வன்னியர் உட்பட 107 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் கொண்டுவந்து, அதற்கென 20% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், அதில் ராமதாஸ் சமரசம் அடையவில்லை. வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தார்.

இந்த முறை அவருக்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க, கள யதார்த்தம் புரிந்தவராக அரசியல் கட்சியை, சாதிச் சங்கமாக மட்டுமல்லாது முறையாக ஓர் அரசியல் கட்சியாகப் பரிமாணித்து எதிர்ப்பதே நலம் என்று உணர்ந்தார். விளைவு, 16.07.1989-ல் பாமக உதயமானது.

பாமகவின் அரசியலுக்கு வீச்சு…

திமுகவுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள், அரசியலில் பெரிய வீச்சைக் கொடுத்தது என்றால், ராமதாஸுக்கு பின்னாளில் பாமக ஓர் அரசியல் இயக்கமாக தன்னை கட்டமைத்ததற்கு மிகப் பெரிய உந்துவிசையாக இருந்தது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் எனலாம்.

ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கி கூட்டணி பேரங்களில் இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்கமாக பாமக உருவெடுக்க வைத்த பின்னணியில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் ஒரு வாவ் வியூகம்தான்.

அதேபோல், தமிழ் மொழியை தங்களால் மட்டுமே காக்க முடியும் என்று திமுக கூறிவந்த சூழலில் தமிழுக்கு ராமதாஸ் அளித்த முக்கியத்துவமும் அவரது கட்சிக்கு பலம் சேர்ந்தது. அவரது கட்சியின் தமிழ் ஓசை நாளிதழும், மக்கள் தொலைக்காட்சியும் குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி, தமிழ் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று அறிவிக்கச் செய்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக உருவான பின்னரும் பல கட்டப் போராட்டங்களை சந்தித்த நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன் வரைவு ஒன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து 2021-ல் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம்.

வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.

வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த உள் ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வராமல் போனது வேறு கதை.

ராமதாஸ் சாதித்தது என்ன?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்கள் ஊடாக ராமதாஸ் சாதித்தது என்னவென்பது சற்றே திரும்பிப் பார்க்க வேண்டிய அரசியல் பாதை. அரசியல் கட்சியான பாமக, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்று தன்னை அடையாளப்படுத்தியது.

1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதுவே பாமக சந்தித்த முதல் சட்டசபை தேர்தலும் கூட. அதில், பண்ருட்டி தொகுதியில் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவின் தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக என பாமக செல்லாத கூட்டணியே இல்லை என்று சொல்லலாம்.

ராமதாஸ்

ஆனால், மத்தியில் பங்கு வகித்தபோது ராமதாஸ் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். அதில் ஒன்றுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. 2008-ல் ஐக்கிய முற்போக்குகூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ், போராடி இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார்.

தொடர்ந்து, மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததிலும் பாமகவின் பங்கு மிகவும் முக்கியமானது.

‘நானோ, என் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம்’ என்று சூளுரைத்தவர் ராமதாஸ். ஆனால், அன்புமணி விஷயத்தில் அவர் அதை பின்பற்றத் தவறினார். இப்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீகாந்தியையும் அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியின்போது, அன்புமணி ராமதாஸ் அமைச்சரானார். அன்புமணி மத்திய அமைச்சராக தேசிய ஊரக சுகாதார இயக்கம் உருவாக வழிவகுத்தார். ‘108 ஆம்புலன்ஸ்’ திட்டம் அறிமுகமானதும் அவரால்தான்.

ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை நீளமானது. ஆனால், அத்தனை போராட்டங்கள், மத்திய அமைச்சரவையில் பங்களிப்பு, அன்புமணியின் சுகாதாரத் துறை பங்களிப்புகள் என்று இருந்தாலும் கூட தமிழகத்தில் இதுவரை பாமக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

அன்புமணி கையில் அஸ்திரம்:

வன்னியர் சமூகத்தான போராட்டங்களால் கட்டியெழுப்பப்பட்டு பின்னர் ஓபிசியினர் அனைவருக்குமான போராட்டமாக வலுப்பெற்று தேர்தல்களில் ஒரு லெவல் ப்ளேயராகவே பார்க்கப்பட்ட கட்சி இப்போது பாமக (ரா), பாமக (அ) என்று பிளவுபடுமோ என்று சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறேன் என்பது போல் அன்புமணியும் இட ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து அதற்காகப் பேசி வருகிறார்.

“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது” என்பதே அன்புமணியின் ஆதங்கமாக உள்ளது.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

“வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதால், வன்னியர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பதை திமுக ஆட்சி முடியும் தருவாய் வரையிலும் அன்புமணி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு போராட்டம் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி, அதை செதுக்கி, என்னதான் உட்கட்சி மோதல் சூழ்ந்தாலும்கூட இன்றளவும் அதன் பிரபலமும் முக்கியத்துவமும் குறையாமல் வைத்திருக்கும் என்றால் அது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்தான்.

ராமதாஸ் என்ற தனிநபரின் வியூகங்களால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ‘வாவ்’ சொல்லாமல் இருக்கவே முடியாது. அதே நேரத்தில் அண்மைக்காலமாக ராமதாஸ் கட்சி, அன்புமணிக்கு எதிராக வெளிப்படையாகவே ‘போராடி’ புலம்புவதைக் கண்டு வருத்தப்படாமலும் இருக்க இயலாது!

(தொடரும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ராஜா என்னுடைய பிள்ளை; யாரோ ஒரு தாய், தவறான கணிப்பிலே.!' – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா...

குண்டு வீசும் முதல்வர்; திகைப்பில் கதர் சட்டைகள் – புகையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள்...

புதுச்சேரி: போலீஸ் தடியடி… எஸ்.ஐ-யை தூக்கிச் சென்று தாக்கிய போராட்டக்காரர்கள்! – நடந்தது என்ன?

போலீஸார் - போராட்டக்காரர்கள் வாக்குவாதம்புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும்...

“இந்தியாவை விற்க வெட்கமாக இல்லையா?" – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்ட `3' செய்திகள்!

இந்தியா அமெரிக்கா இடையே நடந்த முடிந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு...