20
February, 2026

A News 365Times Venture

20
Friday
February, 2026

A News 365Times Venture

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

Date:

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியான குமணந்துறையில், தினேஷ் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராக இருக்கிறார்.

ஊராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக சுந்தரமூர்த்திக்கும், திமுகவின் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த காழ்ப்புணர்ச்சியில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி குமார், ஐந்து வருடங்களாக தினேஷ்க்கு சம்பளம் போடாமல் செய்து விட்டார் என்கிறார்கள். சொந்தக் கட்சிக்காரர் என்பதை கூட பார்க்காமல் குமார் செய்த செயலால் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக சுந்தரமூர்த்தியும் அவரது மகன் தினேஷும் புலம்பி வருகின்றனர்.

சம்பளம் கேட்டு போராடி வரும் தினேஷ்

இது குறித்து தினேஷிடம் பேசினோம், “எங்களோடது தீவிரமான திமுக குடும்பம். என்னோட அப்பா சுந்தரமூர்த்தி 1996 முதல் 2006 வரை தொடர்ந்து இரண்டு முறை மணலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். 2019ல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு என் அம்மா விஜயகுமாரியை போட்டியிட வைத்தார். இதே போல் திமுக துணை ஒன்றிய செயலாளர் குமார் அவரது மனைவி சுமதியை நிறுத்தினார்.

குமார் தரப்பு எங்களை போட்டியில் இருந்து விலகச் சொல்லி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மூலம் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்பா, அதெல்லாம் முடியாதுனு மறுத்துட்டு தேர்தலை எதிர் கொண்டார். இதில் சுமதி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார்.

ஜனநாயக அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இதையடுத்து தேர்தலில் நடந்ததை மனதில் வைத்து கொண்டு எங்களை பழி வாங்கும் முயற்சியில் இறங்கினார் குமார். குமணந்துறை வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றிய எனக்கு ரூ.4,750 சம்பளம் வந்தது. பல்வேறு காரணங்களை சொல்லி எனக்கு சம்பளம் போடாமல் நிறுத்தினார்.

திமுக ஒன்றிய துணைச் செயலாளர் குமார்

ஆனாலும் டேங்க் ஆப்ரேட் செய்கின்ற பணியை நிறுத்தாமல் செய்தேன். நான் தண்ணீர் போட்டு விடுகிறேன் என்கிற ஒரே காரணத்திற்காக 38 மாதங்களாக அந்த டேங்கை சுத்த செய்யாமல் நிறுத்தினார். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சுத்தம் செய்ய வச்சேன். என் சம்பளத்தை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன்.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில், `கலெக்டர், என்னாலேயே சம்பளத்தை நிறுத்த முடியாது’னு சொன்னதுடன் உடனே சம்பளம் போடச் சொன்னார். இதைதொடர்ந்து குமார் தன் அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து அப்போதும் சம்பளம் போடாமல் செய்து விட்டார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு என்னுடைய தொடர் போராட்டத்தின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் முயற்சி எடுத்து கடந்த சில மாதங்களாக எனக்கு சம்பளம் வருகிறது. தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக என்னுடைய ஐந்து வருட சம்பளத்தை போடாமல் செய்து விட்டார்.

சொந்த கட்சிக்காரரையே குமார் இப்படி பழி வாங்குவார்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் அப்பாவுக்கு வயசாகி விட்டது. அவருக்கு மருத்துவச் செலவுக்கு மாதம் ஒரு தொகை செலவாகிறது. எனக்கும் கண்ணில் பிரச்னை இருக்கு. ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்லியுள்ளார்.

மணலூர் ஊராட்சி மன்ற அலுவலகம்

பல வலிகளை தாங்கி கொண்டு நியாயமான என் உரிமைக்காக போராடி வருகிறேன். எனக்கு உரிய நீதி கிடைக்க வில்லை என்றால் அறவழியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின், களத்தில் விசாரித்து யார் மீது தவறு இருக்கிறது என்பதை அறிந்து எனக்கு ஐந்து ஆண்டுக்கான சம்பளத்தை மொத்தமாக போடுவதற்கு உத்தரவிட வேண்டும். திமுக-வை தன் உயிராக கொண்ட அப்பாவுக்கு தன் சொந்த கட்சி நிர்வாகியே இப்படி செய்ததில் மனஉளைச்சலில் இருக்கிறார். அவருக்கு இந்த நடவடிக்கை மருந்தாக அமையும்” என்றார்.

இது குறித்து குமாரிடம் பேசினோம், “வாட்டர் டேங்கை தினேஷ் போடுவதில்லை. அதனால் வேறு நபரை பணிக்கு அமர்த்தி வாட்டர் டேங்கை இயக்கினோம். அவருக்கு அந்த சம்பளம் போடப்பட்டது. வேலையே பார்க்காதவருக்கு எப்படி சம்பளம் போட முடியும். தினேஷ் சொலவதில் உண்மை இல்லை. அவர் சரியான நபர் அல்ல” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அந்தத் தொகுதிகள்தாம் வேண்டும்" – அமைச்சர்களின் தொகுதிகளைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானம்?

தமிழக அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தி.மு.க-வில் முதன்மைச் செயலாளராகவும் இருப்பவர்...

இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! – ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா...

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை… பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க...

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" – திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக...