சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தீயாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனமும், ஆளும் கட்சியின் பதிலும் எனச் சூடுபறக்கும் தமிழ்நாட்டு அரசியலில, திமுக கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தப்படுவதாகவும் அலைகழிக்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு இருக்கும் அரசியல் சிக்கல்களை மறைப்பதற்காகத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியைத் தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகிறார்.
ஒரு காலத்தில் வட இந்தியத் தலைவர்கள் அ.தி.மு.க தலைவரைப் பார்ப்பதற்காக அவர் வீட்டு வாசலில் வந்து நின்ற நிலை இருந்தது. ஆனால், இன்று ஒரு சிறிய முடிவை எடுப்பதற்குக்கூட டெல்லிக்குப் பறந்து செல்லும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்.
இதை மறைக்கத் தொடர்ந்து திமுக கூட்டணியை விமர்சிக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரது கூட்டணியில் உள்ள அ.ம.மு.க, பா.ம.க தலைவர்களும் டெல்லி சென்று வந்த பிறகே தங்கள் பிரச்னைகள் தீர்ந்ததாகக் கூறினார்கள். இப்படி அமித்ஷாவின் முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளை ‘அடிமை’ என்று பேசுவது தேவையற்ற செயல்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தேர்தல் களத்தில் படிப்படியாகத் தனது கட்சியின் வலிமையை நிரூபித்து வளர்ந்தவர். இன்று தி.மு.க தலைமையால் அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இந்த நல்லுறவை எடப்பாடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-விற்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி போன்ற பல கட்சிகள் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. தமிழகத்தில் நோட்டாவிற்குக் கீழே இருந்த பா.ஜ.க-விற்கு எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்.
பீகாரில் நிதீஷ் குமாருக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் சரத் பவார் கட்சிகளுக்கும் என்ன கதி ஏற்பட்டதோ, அதே நிலைதான் அ.தி.மு.க-விற்கும் ஏற்படப் போகிறது. மெல்ல மெல்ல அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்பதை அவர் உணர வேண்டும்.

“மோடியா? லேடியா?” என்று கேட்டு, தேசியக் கட்சியான பா.ஜ.க-விற்கே சவால் விட்டவர் ஜெயலலிதா. ஆனால், இன்று மோடியே எல்லாம் என்று கூறி ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலையை எடப்பாடி பழனிசாமி செய்கிறார். டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் அமித்ஷாவிடம் அடிபணிந்து கிடக்கிறார்.
ஒவ்வொரு கூட்டணிக் கட்சியுடனும் உரிய மரியாதையுடன் முதல்வர் பேசி வருகிறார். இரண்டு, மூன்று முறை பேச வேண்டியிருந்தாலும் அவர்கள் மனம் ஏற்கும் வரை பொறுமையாகப் பேசி ஒருமனதாக தொகுதிப் பங்கீட்டை முடித்திருக்கிறார். இது மனமொத்த கூட்டணி. ஆனால், என்.டி.ஏ கூட்டணி என்பது அமித்ஷாவின் கட்டளைக்கும் அவரது அசைவுக்கும் ஏற்ப அமைக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத தே.மு.தி.க-விற்குக் கூடுதல் இடங்கள் கொடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு மிகத் தெளிவாக திருமாவளவன் பதிலளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் இடங்கள் கொடுத்ததாக நீங்கள் கூறினால், அது தவறு. அது பாரம்பர்யம் மிக்க, தமிழகத்தை ஆண்ட கட்சி. அதேபோல தே.மு.தி.க-வும் தமிழகத்திலே எதிர்க்கட்சியாக இருந்த கட்சி; எனவே அதற்கான அங்கீகாரத்தோடு அந்த இடங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வேல்முருகன் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறவர். அவர் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவர் திமுக தலைவரைப் பார்க்க முடியவில்லை என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இன்று அவதூரை வாரி இறைப்பது தவறான செயல்பாடு” என்று கடிந்துகொண்டிருக்கிறார்.




