3
April, 2026

A News 365Times Venture

3
Friday
April, 2026

A News 365Times Venture

சாத்தான்குளம் வழக்கு: 3 மணிநேரம் விசாரணை செய்த நீதிபதி- குற்றவாளிகள் சொன்னது என்ன? | முழு விவரம்

Date:

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து தரப்பு வாதங்களையும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கேட்டார் நீதிபதி.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை இறந்துவிட்டார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 9 காவலர்கள்

இந்த வழக்கின் விசாரணையானது கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி கைதான 9 பேரும் குற்றவாளிகள் எனவும் தண்டனை விபரங்கள் மார்ச் 30 ஆம் தேதி தெரிவிக்கப்படும் அதற்குள் குற்றவாளிகளின் மனநிலை மற்றும் அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பள விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி முத்துகுமரன் உத்தரவிட்டார்.

மார்ச் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அறிக்கை தாக்கல் செய்யாததால் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரனை மேற்கொண்டார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள்

அதில் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ‘தான் கொலை செய்யும் நோக்கத்துடன் செய்யவில்லை’ என நீதிபதியிடம் தெரிவித்தார். தொடர்ந்து 2 வது குற்றவாளி பாலகிருஷ்ணனிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். ‘என்ன படித்து உள்ளீர்கள்? கடைசியா என்ன சம்பளம் வாங்கினீர்கள்?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

‘ இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனக்கு வேறு வருமானம் இல்லை’ என பாலகிருஷ்ணன் நீதிபதியிடம் முறையிட்டார். வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் நீதிபதி முன்பாக ஆஜராகி குடும்ப விவரங்கள் குறித்தும், ‘எனக்கும் இந்த கொலை வழக்கிற்கும் எந்த சம்பந்தம் எதுவும் இல்லை’ என ரகுகணேஷ் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து குற்றவாளி முருகன் நீதிபதியிடம் பேசும் போது, “பத்தாவது வரை படித்து முடித்துள்ளேன். எனது கண்ணில் பார்வை குறைபாடு உள்ளது. நான் எனது பணியின்போது சிறப்பாக பணியாற்றி உள்ளேன். இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தண்டனையை குறைத்து வழங்கிட வேண்டும்” என முருகன் தெரிவித்தார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள்

குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள காவலர் சாமதுரை, முத்துராஜா, மற்றும் செல்லதுரை ஆகியோரின் குடும்பம் மற்றும் வருமான விவரங்களை சொல்லி வாதிட்டனர். தொடர்ந்து காவலர் தாமஸ் பிரான்சிஸ், “உடல் நலன் குன்றியுள்ளது. தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். காவலர் வெயிலுமுத்து `தனக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி உள்ளார், என்னை நம்பி தான் மொத்த குடும்பமும் உள்ளது’ என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து ஜெயராஜ் பென்னிக்ஸ் தரப்பில்,” குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை போன்ற உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என நீதிபதியிடம் தெரிவித்தனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள்

‘ காவல் மரணங்களில் எத்தகைய அதிகபட்ச தண்டனை வழங்கலாம். அரிதானும் அரிதான காவல் கொடுர வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது

ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி இருவரை கொலை செய்துள்ளனர். பொதுவாக காவல் மரணங்களில் நேரடியாக பார்த்த சாட்சிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் 3 பேர் நேரடியாக பார்த்த சாட்சிகளாக உள்ளனர். ஆகவே அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது இறக்கும் வரை சிறையில் இருப்பது போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும்” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் பேசும் போது, “குடும்பத்தின் ஒரே பொருளாதாரம் ஈட்டும் நபர். உடல்நலம் மற்றும் வயது, 5 ஆண்டு சிறைக்காலம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கோபத்தில் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஜெயராஜை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றது வரை பிரச்சனை இல்லை. பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் தகராறு செய்த பின்னரே பிரச்சனை எழுந்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர்கள்

அவர் விசாரணையில் பிரச்சனை செய்ததால் எழுந்த கோபத்தின் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றே விசாரணை அறிக்கையில் உள்ளது.

மரணம் விளைக்க வேண்டுமென்ற நோக்கம் இல்லை. இரவு 8 மணியிலிருந்து விடிய விடிய அடித்துக் கொண்டே இருந்தார்கள் என்பதும், கொடூர தாக்குதல் என்பதும் ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்து மிகைப்படுத்தியே பார்க்கப்படுகிறது. ஊடகங்கள் இந்த வழக்கை பெரிது படுத்துகின்றன.

அரிதான வழக்கானாலும் குற்றவாளியின் குடும்பப் பின்னணி, மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மரண வழக்கு தொடர்பான பிரிவுகள் அனைத்தும், கொலை விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியாக தண்டனை வழங்குவதாக இருந்ததால், அரிதினும், அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றம்

அதேசமயம் ஏன் தூக்கு தண்டனையை வழங்க வேண்டும்? அது அவசியம் தேவையா? என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் உள்ளன. ஒருவரை சமுதாயத்தில் வாழவே தகுதியற்றவர், அவரை திருத்த இயலாது எனும் முடிவுக்கு வரும் போது தூக்கு தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இது நோக்கமின்றி நிகழ்ந்த மரணம். ஆகவே இறந்துவிட்டார். மன நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் குற்றவாளி செல்லத்துரை தரப்பில் அவருடைய வழக்கறிஞர் காணொளி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் வாதிட்டார்.

ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜராகி, ‘எந்த தவறும் செய்யாத அவரை கொன்று விட்டனர். எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என கண்ணீர் மல்க முறையீடு செய்தனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினரின் வழக்கறிஞர் பேசும் போது, “உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்காகவே கருதப்பட வேண்டும். முழு இரவும் வைத்து அடித்திருக்கிறார்கள். அதற்கு கொடூர ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என குற்றவாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆயுதங்கள் பயன்படுத்தினால் கூட அந்நேரமே முடிந்துவிடும். ஆனால் லத்தியால் தாக்கியிருக்கிறார்கள். பல மணிநேரம் விசாரணை எனும் பெயரில் லத்தியால் தாக்கப்பட்டது கொடூரமானது.

கொடூர மனநிலையிலேயே காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர். ஆகவே, இதனை அரிதினும் அரிதான வழக்காகவே கருதி, உட்ச பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீத்பதி திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வெளியான பட்டியல்… தொடரும் சிக்கல்' – காங்கிரஸ் கட்சியும் ஓயாத சர்ச்சைகளும்!

நீண்ட இழுபறிக்குப் பின் ஒருவழியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரகள் பட்டியல் வெளியாகியுள்ளது....

வெளியான லிஸ்ட்; கரைசேருமா `கமலாலய' கப்பல்? – மோடி சந்திப்பும் அரண்டுகிடக்கும் தமிழக பா.ஜ.க-வும்!

இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல்...

எல்.முருகனுக்கு அவிநாசி தொகுதி; 'வாய்ப்பு கேட்டேன்தான்; யாரும் வந்து பார்க்கவில்லை'- தனபால் குமுறல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத்...