17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

Date:

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்… 

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:

பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி  அரவக்குறிச்சி.  டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுதியின் அடையாளமாக இருந்து வருகிறது.

சாயக்கழிவால் முழுமையாக  பாதிக்கப்பட்டு நாசமாகி  கிடக்கும் நொய்யல் ஆறு, காவிரி, அமராவதி, குடகனாறு, நல்காஞ்சி என பஞ்ச நதிகள் ஓடியும் 70 சதவீதம் விவசாயம் வானம் பார்த்த பூமியாய் மானாவாரி விவசாயத்தை நம்பியே உள்ளது.

பரமத்தி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. அதிக அளவு வெடி மருந்து பயன்படுத்தி மிக ஆழமாக  வெட்டி எடுக்கப்படும் பாறைகளால் கரூர் மாவட்டம் வெப்ப மண்டலமாக மாறி வருகிறது எனும் குற்றச்சாட்டும் உள்ளது .

360 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி மழைக்காலங்களில் காவிரி மற்றும் அமராவதியில் செல்லும் தண்ணீரை இராட்சச குழாய் மூலம் எரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற 35 ஆண்டுகால கோரிக்கை இன்றுவரை விவசாயிகளின் கனவாக இருந்து வருகிறது.

இதனால், பல கிராமங்களில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல், ஆடு, மாடுகளுக்கு தண்ணீரின்றி வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இத்தொகுதி மக்கள். 

அரவக்குறிச்சி

கவுண்டர்கள், பட்டியலின மக்கள், மூன்றாவதாக நாயக்கர் சமுதாய மக்கள் என பல்வேறு பிரிவு சார்ந்த மக்கள் தொகுதி முழுதும் பரவி காணப்பட்டாலும், பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சுமார் 30 ஆயிரம் இஸ்லாமிய  வாக்காளர்களின் வாக்குகள் அரவக்குறிச்சி தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணையம் செய்வதாக உள்ளது.

கடந்த 2021 தேர்தலில் அதிமுக  கூட்டணி கட்சியான பாஜக-வில் போட்டியிட்ட  முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் இளங்கோ.

மீண்டும் அவர் கட்சியில் சீட் கேட்க, இவருக்கு போட்டியாக நொய்யல் குணசேகரன், பரமத்தி ஒன்றியம் கருணாநிதி உள்ளிட்ட பலர் கட்சியில் சீட் கேட்டு களம் இறங்க தயாராகி வருகின்றனர்.

கூட்டணிக்கு தொகுதி கைமாறும் பட்சத்தில் புதிய திராவிட கழகம் சார்பில் ராஜ்கவுண்டர், மதிமுக நிர்வாகி ஆசை சிவா என பலர் ரேஸ் ஓட தயார் நிலையில் நிற்கினர்.

அதிமுகவில்  கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி  இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் சீட் கேட்டு தலைமையிடம் அழுத்தம் கொடுத்த வருகின்றனர்.

திமுகவில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொறுத்து  நால்வரில் ஒருவருக்கு சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம் கட்சி தலைமை .

தவெகவில் பெயர் சொல்லும் அளவிற்கு மக்கள் அறிமுகம் செல்வாக்கு கொண்டவர்கள் யாரும் இல்லையென்றாலும்,  தொகுதியில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் என விஜய் பெறும்  கனிசமான வாக்குகள்  திராவிட கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

 கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, சிறுபான்மையினரின் வாக்கு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்குத் தொகுதியில் உதயசூரியன் கூடுதலாகப் பிரகாசிக்கிறது எனலாம். எனினும் வேட்பாளர் தேர்வும், தவெக பிரிக்கும் வாக்குகளும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கரூர் சட்டமன்ற தொகுதி:

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள கரூர், வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதியாகும்.  சேர மன்னர்களின் தலைநகராக விளங்கிய வஞ்சி மாநகரத்தின் மறு பெயர்  கரூர்.

சமூக ரீதியாக கொங்கு வேள்ளாளக் கவுண்டர், அதற்கு அடுத்து முதலியார், சோழிய வேளாளர், முத்தரையர், ஆதிதிராவிடர்  மக்கள் என பரவலாக காணப்படுகின்றனர்.

ஆதிதிராவிடர், முத்தரையர் மற்றும் முதலியார் சமூகத்தினர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். நகர்ப் புறங்களில் சிறுபான்மையினர் வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் சவால்களாக இருப்பது,

சுற்றுச்சூழல் பிரச்சினை, ஜவுளித் தொழிலால் நிலத்தடி நீர் பாதிப்பு, அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க பொதுச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

கரூர் நகரின் மையப்பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குத் தேவையான திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் கரூர் முன்னணியில் உள்ளது. ஆண்டு தோறும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் செய்யப்பட்டு  அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி மையமாக உள்ளது.

கொசுவலை உற்பத்தி

ஆசியாவிலேயே கொசு வலை உற்பத்தியில் முதலிடம் பிடித்த நகரம் என்பது  குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவின் “Bus Body Building” தலைநகரம் எனப் போற்றப்படும் கரூர், பேருந்து கூண்டு கட்டும் தொழிலில் தேசிய அளவில் பெயர் பெற்றுள்ளது.

எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

2021 தேர்தலில் திமுகவில் களம் கண்ட செந்தில் பாலாஜி, 12,446 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார். திராவிட கட்சிகளில் பங்காளிகள் இருவருமே மீண்டும் களம் காண்பதால் பெரிய அளவில் இவர்களுக்கு கட்சியில் போட்டியில்லை களத்தில் தான்  இவர்களுக்கு போட்டி என்கிறார்கள்.

TVK - விஜய்யுடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்
TVK – விஜய்யுடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்

கரூர் மாவட்டத்தின் ராசியோ என்னவோ இங்குள்ள மாவட்ட செயலாளர்கள் எதாவது ஒரு வகையில் கட்சி தலைமையில் நெருக்கமாகி விடுகின்றனர்.

கரூர் மாவட்ட தவெக தலைவர் மதியழகன் கட்சி மேல்மட்டத்தில் மிக நெருக்கமாகி விட்டார். இதனால், இவருக்கே சீட் என  தெரிகிறது.

 கட்சிக் கட்டமைப்பு, சிறுபான்மை வாக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைய சூழலில் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கிறது.

எனினும் கரூர் தொகுதியில் விஜய்க்கு கணிசமான ஓட்டுகள் கனிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டுகளால் பின்னுக்கு தள்ளப்படும் திராவிட கட்சி எது? என்பது தான் விஷயமே என்கிறார்கள்.

கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி

1967-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்து வரும் கிருஷ்ணராயபுரம் (தனி),  1952-ல் முதல் 2021 வரை 16 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது.

பட்டியலினத்தோர், முத்தரையர், ஊராளி கவுண்டர், குரும்ப கவுண்டர், நாயக்கர் மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர்.  

விவசாயம் கூலி வேலை, கால்நடை வளர்ப்பு, கட்டட தொழில், வாழை, வெற்றிலை, நெல், கரும்பு, கடலை, எள், சூரியகாந்தி போன்ற விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அதிமுகவில் சீட் கேட்பவர்கள் பட்டியல் பெரிய அளவில் நீண்டுள்ள போதும்,  கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக உள்ள தானேஷ் (எ) முத்துக்குமார்  கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 31,625 வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியை சந்தித்தார்.  இம்முறையும் மீண்டும் தனக்கு சீட் வேண்டும் போராடி வருகிறார்.

கிருஷ்ணராயபுரம்

இந்த நிலையில்  தொகுதியில் பிரபல டாக்டர் திவ்யா என்பவர்  மக்களை களத்தில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதிமுகவில் இந்த இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. 

திமுக சிட்டிங் எம்எல்ஏ சிவகாம சுந்தரிக்கும் மாவட்ட துணைச் செயலாளர் பூவை.ரமேஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தான் போட்டி. இருவரும் ரேஸில் உள்ளனர்.

தவெக சார்பில் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் டி. அரசு, மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் ரேஸில் தயார் நிலையில் உள்ளனர்.

கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்கு உதயசூரியன் தொகுதியில் பிரகாசிக்கிறது. தவெக வாக்குகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிப்பதும் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைக்கிறது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி:

குளித்தலை தொகுதியில் ரெட்டியார், முத்தரையர், சோழியவெள்ளார்,  பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர். 

இத்தொகுதி அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதன் முதலாக போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் நிறைந்த விவசாயம் நிறைந்த பூமியாகும்.

காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் பலரும் நெல் கரும்பு வாழை வெற்றிலை முருங்கை பயிர்களை பயிரிட்டும் வருகின்றனர். குளித்தலை பகுதிகளில் வாழைத்தார்கள் மற்றும் முருங்கையை பதனிட செய்ய சேமிப்புக் கிடங்கு வேண்டுமென்றும் விவசாயிகள்  கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது.

குளித்தலை

2021 தேர்தலில் திமுக வேட்பாளர் இரா.மாணிக்கம்,  23,540வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் என். ஆர். சந்திரசேகரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார்.

சிட்டிங் எம்எல்ஏ மாணிக்கம் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், குளித்தலையில் சீட் கேட்டு முன்னாள் நகராட்சி தலைவர் பல்லவிராஜா, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ராமர் உள்ளிட்ட பலர் போட்டி போட்டுக் கொண்டு  கேட்டு ரேஸில் இருந்து வருகின்றனர்.

அதிமுகவில் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம்,  நான்கு முறை எம்எல்ஏ வாக இருந்த பாப்பா சுந்தரம் மகன் ஒன்றிய செயலாளர் கருணாகரன், கரூர் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் தீவிரமாக சீட் கேட் களத்தில் போட்டா போட்டியில் உள்ளனர்.

தவெக சார்பில் பலர் சீட் கேட்டுள்ள நிலையில், கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து களத்தில் தயார் நிலையில் இருந்து வருகிறார். 

தவெக வாங்கும் வாக்குகள் தான் திராவிட கட்சிகளின் வெற்றி தோல்வி தலையெழுத்தை நிர்ணையிக்கும் நிலை காணப்படுகிறது. களம் திமுக அதிமுக என இரு கூட்டணிகளுக்குமே சவாலானதாக தான் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக, அதிமுக சம பலத்தில் இருந்தது. கடந்த 2021 தேர்தலில் நான்கு தொகுதியையும் திமுக வசமாகியது. ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வெற்றியின் வாக்கு வித்தியாசம் 20 முதல் 30 ஆயிரம் வாக்குகள்.

கூட்டணி பலத்தையும் மீறி இம்முறை தவெக ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பெற்று தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.

ஆக, திமுக, அதிமுக இரு கட்சிகளின் கரூர் ஆட்டம், தவெக பெறும் வாக்குகளை மையப்படுத்தி உள்ளது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ரஜினியை பற்றி பேசினால்…' – ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! – விவரம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற...

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! – மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத்...

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை...