“கரூர் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்து இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் நோக்கத்தில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக-வினர் மனிதப்பட்டிகள் அமைத்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டு, 48 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மனிதப்பட்டிகளை புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரைச் சந்தித்து, புகார் மனு அளித்தார், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கரூரில் 100 இடங்களில் திமுக சார்பில் ஆடு, மாடுகளை அடைப்பதுபோல மனிதர்களை அடைப்பதற்கு மனிதப்பட்டிகள் தயார் செய்து வருகின்றனர். 48 இடங்களில் போடப்பட்டுள்ள மனிதப்பட்டிகளின் புகைப்பட ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து உள்ளோம். மொத்தம் 100 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் போட்டோ, ஆதார் கார்டு வாங்கி அவர்களை உள்ளே உட்கார வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். மனிதப்பட்டி என்றால், சாதாரண பட்டியல்ல… மிகப்பெரிய பட்டி 6 0X 40, 80×40 என 5,000 முதல் 6,000 சதுர அடியில் மனிதப்பட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் அனுமதி இல்லாமல் கல்யாண மண்டபம்போல் செட் அமைத்துள்ளனர்.
உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாத வகையில் செட்டைச் சுற்றி 8 அடி முதல் 10 அடி உயரம் அடைத்து விட்டனர். ஒவ்வொரு மனிதப்பட்டியிலும் எல்.இ.டி லைட், ஃபேன் அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் 50,000 சேர் வாங்கியுள்ளதாக, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.
இந்த மனிதப்பட்டிக்குப் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 50,000 வாக்காளர்களை சிஃப்ட் முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு குரூப் என லிஸ்ட் தயார் செய்துள்ளனர். மனிதப்பட்டியில் அடைத்து வைத்து அவர்களுக்கு தினசரி 500 ரூபாய், சாப்பாடு, ஆண்களுக்கு சரக்கு என அனைத்தும் ஏற்பாடு செய்யப்படுவதாக திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடியும் வரை 1 லட்சம் வாக்காளர்களை அமரவைத்து அவர்களை பிரைன் வாஷ் செய்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரியிடம் புகார் அளித்தால், பட்டா நிலத்தில் போட்டுள்ளனர் எனக் கூறுகிறார். பல இடங்களில் கோயில் இடத்தில் அமைத்துள்ளனர். அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். திமுக-வின் கைக்கூலியாக கரூர் மாவட்ட அதிகாரிகள் உள்ளனர். இவர்களை வைத்து தேர்தல் நடத்தினால் தேர்தல் முறையாக நேர்மையாக நடக்காது. கரூர் மாவட்டத்தில் உள்ள எல்லா அதிகாரிகளும் திமுக-விற்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். தேர்தல் தொடர்பாகப் புகார் அளிக்கும் சி.யூ.ஜி ஆப், பல நேரங்களில் வேலை செய்வது இல்லை. அப்படியே வேலை செய்தாலும், புகாருக்கு சரியான பதிலோ, நடவடிக்கையோ இல்லை. அதிமுக-வினர் கொடுக்கும் புகார்களை க்ளோஸ் செய்ய வேண்டும் என்பதே குறியாக உள்ளனர்.
மனிதப்பட்டியில், தினசரி சாப்பாடு, சரக்கு, பணம் என இந்த மூன்றையும் கொடுத்து, மக்களை அடிமையாக்கி தேர்தலில் ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். அமமுக-வில் இருந்தபோது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றினர்.

அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 25,000 பேருக்கு 3 சென்ட் நிலம் மற்றும் கான்கிரீட் வீடு சொந்த செலவில் கட்டித் தருவதாகக் கூறி அதையும் ஏமாற்றினர். கரூர் தொகுதியில் 100 ரூபாய்க்குக்கூட போகாத கல்லு வெள்ளி கொலுசை கொடுத்து மகளிரை கடைசி நேரத்தில் ஏமாற்றினர்.
தேர்தலில் ஸ்டாலின் ஜெயித்து முதல்வராக 11 மணிக்கு கையெழுத்து போட்டால், 11:05 மணிக்கு நீங்கள் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கலாம். எந்த அதிகாரி தடுத்தாலும் என்னிடம் கூறுங்கள். அந்த அதிகாரி இல்லாமல் போய்விடுவார் எனக் கூறி, ஓட்டு வாங்கி ஜெயித்தார்.
கரூரில், கோடிக்கணக்கில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீஸார் செக்போஸ்ட் அமைத்து வண்டிக்கு வண்டி பணம் வசூல் செய்வதில் குறியாக இருந்து வருகின்றனர். மணல் கொள்ளையைத் தடுக்கவில்லை.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்குத் தங்கம் கொடுக்க இருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஏன் என்றால், மணல் கொள்ளையில் அடித்த பணம் கையில் இருப்பதால் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் சி.எம்., அலுவலகத்தில் இருந்து அவரது பி.ஏ போன் செய்கிறார். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள். மாவட்ட அதிகாரிகள் திமுக-வினர் செய்யும் சட்ட விரோதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் தடுமாறுகின்றனர்.

தேர்தல் உண்மையாக, நேர்மையாக நடக்க விடாமல், இது போன்ற கோல்மால் வேலைகளை செய்து ஜெயித்து விடலாம் என திமுக-வினர் நினைக்கின்றனர். நாங்கள் அதிகாரிகளை நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கட்சி தலைமையிடம் கூறி தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க முடிவு எடுத்துள்ளோம். கரூரில், இப்போது இருக்கும் அதிகாரிகளை வைத்து தேர்தல் நடத்தினால் தேர்தல் உண்மையாக, நேர்மையாக நடக்காது. அத்தனை அதிகாரிகளும் திமுக-வின் கைக்கூலியாக இருக்கின்றனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளை கூண்டோடு மாற்றிவிட்டு, தேர்தலை நடத்தினால் மட்டும்தான் தேர்தல் நேர்மையாக நடத்த முடியும்… இல்லை என்றால் தேர்தல் நடக்காது” என்றார்.




