ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகளில் அதிக அளவு மக்கள் தங்களுக்கு தேவையான அளவைவிட அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்கி சென்று வருகின்றனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கு lpg எரிவாயு நிரப்பும் சுமார் 12 எல்.பி.ஜி பங்குகள் உள்ளது. அதில், எல்.பி.ஜி கேஸ் இல்லாமல் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பங்க் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதனால், எல்.பி.ஜி நிரப்புவதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் அங்கு சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எல்.பி.ஜி எரிவாயுகளை நிரப்பி செல்கின்றனர்.

“காலதாமதம் ஆவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எங்களுடைய ஒரு நாள் வருமானமே போய்விட்டது. இதே நிலை நீடித்தால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, அரசு இதில் உரிய கவனம் எடுத்து இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




